November 30, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் ஒன்றியத்தில் ஊராட்சி செயலர் பணியிடமாற்றம் கலந்தாய்வு சந்தேகத்தில்!

விளாத்திகுளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது கடும் குற்றச்சாட்டுகள் – மாவட்ட ஆட்சியர் தலையீடு அவசியம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு துணைத் தலைவர் ஆர். ஜெயக்குமார், விளாத்திகுளம் ஒன்றியத்தில் நடைபெறும் ஊராட்சி செயலர் பணியிடமாற்றம் குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அரசு பல நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் நிலையில், அவை சரியாக அமல்படுத்தப்படாமல், அதிகாரிகள்–அரசியல்வாதிகள் கூட்டணியால் சீர்குலைக்கப்படுகின்றன” என அவர் கூறினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விளாத்திகுளம் ஒன்றிய அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருவது, அதுவும் வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் மாற்றி மாற்றி அதே ஒன்றியத்தில் நீடிப்பது, ஊராட்சி செயலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எந்த கட்சியும் ஆட்சிக்கு வந்தாலும் அவர் பணியிடமாற்றம் செய்யப்படாமல் இருப்பது மட்டுமல்லாமல், அரசு நலத்திட்டங்களை “தனக்கு வேண்டியவர்களுக்கு” மட்டும் பரிந்துரை செய்வது சட்டப்படி தண்டனைக்குரியது மேலும் கண்டனத்திற்குரியது என்று ஆர். ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். மேலும், கிராம ஊராட்சி செயலர்களுக்கு அதிக (மன) அழுத்தம் கொடுத்து, ஊராட்சி நிதிகளை வீண்செலவு செய்வதாக பல புகார்கள் இருந்தும், அவரை அரசு அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யாமல் இருப்பது ஏன்..  யார் ,எந்த  அரசியல் பிரமுகர் குறுக்கீடு இவர் பணியிடை மாற்றத்திற்கு தடையாக உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவர் மீது கூறும் குற்றச்சாட்டுகளின்படி,  தனக்கு சாதகமான கிராம ஊராட்சி செயலர்களுக்கே வருமானம் வரும் பஞ்சாயத்துகளை ஒதுக்கி, திறமையான செயலர்களை “அந்த பஞ்சாயத்தை நடத்த முடியாது” என்ற பெயரில் புறக்கணிக்கிறார். இதனால் ஊராட்சி நிர்வாகத்தில் அநீதி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “இந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இருக்கும் வரை எந்த கலந்தாய்வும் கண்துடைப்பு மட்டுமே. மாவட்ட ஆட்சியர் தலையிட்டால்தான் தகுதியான செயலர்களுக்கு நீதி கிடைக்கும்” என ஆர். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

“மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நல்ல திட்டங்களை கிராம ஊராட்சிகளுக்கு வழங்கி வந்தாலும், அதில் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று அதிகாரிகள் சதி செய்கின்றனர். அதற்காகவே தனக்கு கீழ் பணிபுரியும் செயலர்களை தேர்வு செய்கிறார்கள். இது மக்கள் விரோத போக்கு” எனக் கடுமையாக சாடினார்.இதை மாவட்ட ஆட்சியர் கவனிக்கவேண்டும், விளாத்திகுளம் ஒன்றியத்தில் நடைபெறும் பணியிடை மாற்றம் கலந்தாய்வு உண்மையில் ஊராட்சி செயலர்களுக்கு நீதி செய்யுமா? அல்லது அதிகாரிகள்–அரசியல்வாதிகள் கூட்டணியின் கண்துடைப்பு நாடகமா?

இதற்கான விடை, மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டால் மட்டுமே வெளிவரும் என கூறினார்.