தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், காற்றாலை இறக்கைகள் கையாளுதலில் தனது செயல்திறனை நிரூபித்து வருகிறது. காற்றாலை இறக்கைகளை ஏற்றுமதி செய்ய தேவையான நவீன வசதிகள், எந்திரங்கள் மற்றும் விரிவான இடவசதி உள்ளதால், ஆண்டுதோறும் ஏற்றுமதி அளவு நிலையான வளர்ச்சியை பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 1,099 காற்றாலை இறக்கைகள் கையாளப்பட்ட நிலையில், இவ்வாண்டு இதுவரை 1,158 இறக்கைகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 5% அதிகரிப்பு என வணிக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த வளர்ச்சிக்குள், சமீபத்தில் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது. சுமார் 59.18 மீட்டர் நீளம் கொண்ட 101 காற்றாலை இறக்கைகள், எம்.வி. பி.பி.சி என்ற கப்பல் மூலம் ஒரே தடவையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ஒரே கப்பலில் அதிகபட்சம் 75 இறக்கைகளே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் ராஜேஷ் சவுந்தரராஜன், இந்த சாதனையில் பங்காற்றிய அனைத்து பங்குதாரர்களையும் வாழ்த்தியுள்ளார். ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி செய்த சாதனை, துறைமுகத்தின் திறன், செயல்திறன் மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை ஆதரிக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
வணிக வட்டாரங்கள் இதனை, தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச வர்த்தகத்தில் வலுவான மையமாக மாறி வருவதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதுகின்றன.

