December 1, 2025
#தூத்துக்குடி

மீனவர்களுக்கு மானிய மண்ணெண்ணெய் அட்டை, லைஃப் ஜாக்கெட்களை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினர்

தூத்துக்குடி ஒருங்கிணைந்த மீன்வளம் – மீனவர் நலத்துறை அலுவலகத்தில் 11.8.2025 அன்று நடைபெற்ற விழாவில் நாட்டுப் படகு மீனவர்களுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் அட்டை மற்றும் உயிர்காப்பு சட்டைகளை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 3816 மீன்பிடி நாட்டு படகுகளில் 1685 படகுகள் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்ட மானிய எரிஎண்ணெய் பயன்படுத்தியும் மற்றும் 1320 மீன்பிடி படகுகளில் மீனவர்கள் தமிழ்நாடு அரசின் மானிய தொழிலக மண்ணெண்ணெய்யினை கொண்டு மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

வருடத்திற்கு 3400 லிட்டராக இருந்ததை 3,700 லிட்டர் மண்ணெண்ணெயை கூடுதலாக ..

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18.08.2023 அன்று நடைபெற்ற மீனவர்களுக்கான சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருடத்திற்கு 3400 லிட்டராக இருந்த மானிய தொழிலக மண்ணென்ணெயை வருடத்திற்கு 3,700 லிட்டர் என உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தற்பொழுது தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக 148 பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் மானிய தொழிலக மண்ணென்ணெயை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் 2023 – 24 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளின்படி, தமிழக கடற்பகுதியில் மீன்பிடித் தொழில் ஈடுபடும் நாட்டுப்படகு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ரூபாய் 450 கோடி திட்ட மதிப்பீட்டில் 75 விழுக்காடு மானியத்தில் முதல் கட்டமாக 10,000 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளுக்கு உயிர் காப்பு சட்டைகள் லைஃப் ஜாக்கெட் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உயிர்காப்பு சட்டைகள் அலகு ஒன்றின் விலை ரூபாய் 2472 என நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான அரசின் அதிகபட்சம் 75 சதவீதம் மானியத் தொகை 1854 மற்றும் பயனாளியின் 25 சதவீத பங்களிப்புத் தொகை ரூபாய் 618 என்ற நெறிமுறைகளின் படி வழங்கிட ஆணை பெறப்பப்பட்டுள்ளது.

2000 நாட்டு படகுகளுக்கு 6199 உயிர் பாதுகாப்பு சட்டைகள் இலக்கு:

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2000 நாட்டு படகுகளுக்கு 6199 உயிர் பாதுகாப்பு சட்டைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூபாய் 39 லட்சம் மானிய செலவினத்தில் 2014 எண்ணிக்கையில் உயிர்காப்பு சட்டைகள் பெறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஒருங்கிணைந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகத்தில் 11/8/2025 அன்று நடைபெற்ற விழாவில் மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் 148 பாரம்பரிய நாட்டுப் படகுகளுக்கு புதியதாக தொழிலக மானிய மண்ணெண்ணெய் பெறும் அட்டை மற்றும் உயிர்காப்பு சட்டைகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் ந.சந்திரா, உதவி இயக்குனர் (மீன்பிடித் துறைமுக மேலாண்மை) க.ஜெனார்த்தனன் மற்றும் உதவி இயக்குனர் அ.புஷ்ரா ஷப்னம், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநில மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் அந்தோணி ஸ்டாலின், ஜெபமாலை, திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரி சங்கர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் இன்பா ரகு, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம் மற்றும் எஸ்.ஜே.ஜெகன், மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி, விஜயகுமார், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா தேவி, இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், வட்ட செயலாளர்கள்டென்சிங், ரவிச்சந்திரன், பொறுப்பாளர் மரிய ஆன்ஸ், வட்ட பிரதிநிதிகள் மார்ஷல், ஆறுமுகம், தெற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வீரபாகு, வடக்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலஸ் மணி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், மகேஸ்வரி, மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.