தூத்துக்குடி சிவன் கோவில் பெரிய தேருக்கு புதிய கண்ணாடி இழைக் கொட்டகை அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகரில் பிரதி பெற்ற மிகவும் பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் (சிவன்) திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா ஐப்பசி திருவிழா சிவராத்திரி கந்தசஷ்டி பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இக் கோயிலின் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. நேற்றைய தினம் சித்திரை திருவிழா திருத் தேரோட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் பெரிய தேருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 8.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கண்ணாடி இழைக் கொட்டகை அமைப்பதற்கான பணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, திருக்கோவில் தலைமை அச்சகர் செல்வம் பட்டர், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, வைகுண்டபதி பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பகுதிச் செயலாளர் சுரேஷ் குமார், மாவட்டப் பிரதிநிதி அனல் சக்திவேல், வட்டச் செயலாளர் கங்கா ராஜேஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

