December 1, 2025
#தூத்துக்குடி

வ.உ.சி. கல்லூரி கணேஷ் நகர் முதல் பாலிடெக்னிக் வரை புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்

தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே புதிய வழித்தடத்தில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சாலை விரிவாக்கம் மேயர் ஜெகன்  பெரியசாமியின் மாஸ்டர் பிளான்.

தூத்துக்குடி மாநகராட்சி உட்கட்டமைப்புகளில் மிகவும் ஆணிவேராக திகழ்வது சாலை வசதி அதை முழு முயற்சியாக பல தடைகளை உடைத்தெறிந்து மக்களின் நலனுக்காக சிந்தித்து உடனடியாக செயலில் ஈடுபடும் மேயர் ஜெகன் பெரியசாமி என பெருமிதம் கொள்கின்றனர் மக்கள் நலனில் அக்கறை கொண்டோர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பல்வேறு தொழிற்சாலை நிறைந்த மாநகராகும் இங்கு கப்பல், விமானம், ரயில் பேருந்து உள்ளிட்ட தரை வழி போக்குவரத்து வசதிகளை பெற்ற தென்னிந்தியாவிலேயே வளர்ந்து வரும் தொழில் வளம் மிக்க மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகரம் உருவாகி வருகிறது. குறிப்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை வசதி, கப்பல், இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளும் இணைக்கப்பட்டு போக்குவரத்து நிறைந்த மாநகராக தூத்துக்குடி உள்ளது.

தூத்துக்குடியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பிரதான சாலைகளை தரம் உயர்த்தியும், விரிவாக்கம் செய்தும் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதனடிப்படையில் தூத்துக்குடி பாளை ரோட்டில் ஏற்ப்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில்; தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மேற்கு பகுதி கணேஷ் நகர் முதல் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி பகுதி வரையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக அந்த இடத்தில் புதிய வழித்தடத்தை உருவாக்கி பொதுமக்கள் வசதிக்காக புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி மேற்கொண்டார். இந்த புதிய சாலைப் பணிகளை மேயர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

புதிய வழித்தடங்கள்:

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பிரதான சாலைகளையும் சந்திப்புகளையும் அகலப்படுத்தியும், மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் பல புதிய வழித்தடங்களையும் உருவாக்கியும் வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக கணேஷ் நகர் முதல் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வரை நடைபெற்று வரும் புதிய தார் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

டீச்சர்ஸ் காலனி ரவுண்டானா அழகு படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தபோது. உடன் கவுன்சிலர் சந்திரபோஸ்.

மேலும், ஆசிரியர் காலனி பகுதியில் நடைபெற்று வரும் ரவுண்டானா மற்றும் வண்ண சின்னங்கள் மற்றும் அதன் அருகே உள்ள பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், வட்ட செயலாளர் குமார், பகுதி பிரதிநிதி பிரபாகர், உதவியாளர் ஜோஸ்பர், மாநகராட்சி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்

 

.