December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அளித்த மனுக்களுக்கு 40 மனுக்களுக்கு தீர்வு மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்த 40 பேருக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையில் புதன்கிழமை தோறும் வாரம் ஒரு மண்டலத்தில் உள்ள மக்களின் குறைதீர்க்கும் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மக்கள் குறைதீர்க்கும் முகாம் வடக்கு மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் 105 மனுக்கள் பெறப்பட்டன. அன்றையதினம் 6 மனுக்கள் உள்பட 40 மனுக்களுக்கு உடனடி தீர்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து ஆணைகளை வழங்கி பேசியதாவது: மாநகராட்சியில் உள்ள மக்கள் குறைகளை விரைந்து தீர்க்கும் வகையில் இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் வாரங்களில் அடுத்தடுத்த மண்டலங்களில் இம்முகாம் நடத்தப்படும். இதன் முக்கிய நோக்கம் ஒரே மாதத்தில் மனுக்களுக்கான தீர்வு அளிப்பதாகும். அதன்படி, முகாமில் வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு தொடர்பான 105 மனுக்கள் பெறப்பட்டன. உடனடியாக அதே இடத்தில் 6 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. மீதி 34 பேருக்கு வழங்கப்பட்டு, கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. இதில், தீர்வை பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகள் அடங்கும் என்றார்.

நிகழ்ச்சியில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, உதவி ஆணையர் பொறுப்பு நரசிம்மன், இணை ஆணையர் ராஜாராம், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜோஸ்பர், உள்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.