| தூத்துக்குடி மாநகராட்சி மண்டல குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்ட 27 பேருக்கு தீர்வு ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். |
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாரந்தோறும் மண்டல வாரியாக குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில்மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக் கொண்டு அதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலித்து தீர்வுகாணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களின் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட 27 பேருக்கு தீர்வாணைகளை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
| கேரி பேக்குகளை ஒழித்து, வீட்டுக்கு வீடு மரங்களை வளர்க்க வேண்டும் – மேயர் ஜெகன்; |
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் முன்னிலையில் தீர்வு ஆணைகளை பொதுமக்களுக்கு வழங்கி பேசுகையில்;
துாத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர், தரமான சாலை, தெருவிளக்கு, வடிகால் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாநகராட்சி முழுமையாக செய்து கொடுத்து வருகிறது. மக்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் அதற்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
அதே சமயம் மக்களிடம் மாநகராட்சி நிர்வாகம் எதிர் பார்ப்பது குடிநீரை வீணாக்க கூடாது. சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதே போல் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு குறிப்பாக கேரி பேக் உபயோகத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பக்கிள் ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள்தான் அதிகமாக கிடக்கிறது. இதனால் கழிவுநீர் கடலில் கலப்பது தடைபட்டுகிறது, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அதனை அகற்றுவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்பாட்டை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாலை வசதியை பொறுத்தவரை புதியதாக 1500 சாலைகள் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது.
மாநகராட்சி சார்பில் இதுவரை 5 லட்சம் மரக் கன்றுகள் நடவு செய்துள்ளோம், பொதுமக்களும் வீட்டுக்கு வீடு மரங்களை வளர்த்து நமது நகரை பசுமை நகராட்சியாக உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். என்று மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.
முன்னதாக மாநகராட்சியில் விபத்து இல்லாமல் 25 ஆண்டுகளுக்கு மேலாக வாகன ஓட்டுனர்களாக பணியாற்றி வரும் சரவணபாண்டி, ராமநாதன் ஆகியோரை பாராட்டி, மேயர் ஜெகன் பெரியசாமி ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர துணை பொறியாளர் சரவணன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் எம்.சி, மாநகர திமுக துணை செயலாளர் கனகராஜ் எம்.சி, கவுன்சிலர் ரெக்ஸ்லின், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜேஸ்பர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


