“நல்ல புத்தகங்கள் என் நண்பர்களாக இருந்தன. அவை எனக்கு துணையாக இருந்தன.”. மகாத்மா காந்தி.
தூத்துக்குடி,தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நூலகங்களை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை புத்தகப் பூங்கா, பொது நூலக இயக்ககம் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்திலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு நூலகத்தினை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மேயர் ஜெகன் பெரியசாமி
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்;
தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் பொது அறிவினை வளர்க்கவும், போட்டித் தேர்வுகளுக்கும், உயர்கல்வி படிப்பிற்கும் தேவையான அனைத்து குறிப்புகளை எடுத்து படிப்பதற்கு ஏற்றவாறு மாநகராட்சிகளுக்குட்பட்ட பள்ளிகள், மக்கள் கூடும் இடங்களில் நூலகங்கள் அமைக்க வேண்டுமென ஆணையிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில் மாநகராட்சி பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு மாணவர்கள் போட்டித்தேர்வர்கள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு நூலகங்கள் அமைக்கும் திட்டத்தினை அறிவித்தார்கள்.
அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அனைத்து மாவட்டங்களில் 110 கூடுதல் நூலக கட்டிடங்களையும், 70 சிறப்பு நூலகங்களையும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா (பழைய) பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள், பொதுமக்கள் தங்களது நேரத்தை பயனுள்ளதாக அமைத்திடும் வகையில் பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிலும் மாணவ மாணவியர்களும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக இருக்கும் வகையில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு, தூத்துக்குடி மாநகராட்சி சார்பிலும், மாநகர மக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
உடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார், துணை மேயர் செ.ஜெனிட்டா, முதல் நிலை நூலகர் ராம் சங்கர், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, இரண்டாம் நிலை நூலகர் சங்கரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ரெக்ஸ்லின், ராமு அம்மாள், நாகேஸ்வரி, மரிய சுதா, வைதேகி, சுப்புலட்சுமி, அந்தோணி மார்ஷலின், முத்துவேல், மும்தாஜ், பேபி ஏஞ்சலின், மரிய கீதா, மற்றும் நூலகர்கள் மேரி ரெஜினி, அந்தோணி செல்வராஜ், மும்தாஜ், லதா மற்றும் போல் பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயரின் உதவியாளர்கள் ரமேஷ், ஜோஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

