December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தாயின் கண்ணீரில் கவின் – கனிமொழி எம்.பி, அமைச்சர்கள், எம்எல்ஏ’க்கள் , கலெக்டர் அஞ்சலி செலுத்தினர்

கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் உடலுக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள், எம்எல்ஏ’க்கள், கலெக்டர், எஸ்பி அஞ்சலி செலுத்தினர்.


தூத்துக்குடி நெல்லையில் ஜூலை 27 அன்று தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஐடி கம்பெனி ஊழியர் கவின் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில், 01.08.25 அன்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி கலெக்டர், எஸ்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஆறுமுகமங்கலத்தில் கொலை செய்யப்பட்ட கவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

 இந்தப் படுகொலையில் முக்கிய கொலையாளியாக கருதப்படும் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கவினின் உடலை பெற்றுக்கொள்ள அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, 5 நாட்களுக்கு பின் கவினின் உடலை அவரது குடும்பத்தினர் 01.08.25 அன்று பெற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து, கவினின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா, ஸ்ரீவை ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் மற்றும் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.