November 30, 2025
#தூத்துக்குடி

புத்தொழில் களம் திட்டத்தில் தேர்வான தூத்துக்குடி இளைஞர்களுக்கு கனிமொழி நிதியுதவி

கனிமொழி கருணாநிதி எம்பி,     உருவாக்கிய புத்தொழில் களம்


தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்பி, உருவாக்கிய “புத்தொழில் களம்” திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிறந்த இளம் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இளம் தொழில் முனைவோர்களுக்கு முதல் கட்டமாக தலா ரூ.2லட்சம் நிதியுதவியை கனிமொழி கருணாநிதி எம்பி, வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்களின் புதுமையான தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், ‘புத்தொழில் களம்’ என்னும் புதிய திட்டம் 05.04.25 அன்று கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் உருவாக்கப்பட்டது.

இதில் 400 இளம் தொழில் முனைவோர் தங்களது தொழில் திட்டங்களை சமர்ப்பித்தனர். இதிலிருந்து 10 திட்டங்களை தேர்ந்தெடுத்து அதிலிருந்து

கோவில்பட்டியைச் சேர்ந்த ஆர்த்தி, விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த தானேஷ் கனகராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் காஸ்கேரினோ ஆகிய 3 பேரின் தொழில் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்தனர்.

இதனையடுத்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், 29.04.25 அன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, தேர்வு செய்யப்பட்ட முதல் மூன்று இளம் தொழில் முனைவோருக்கு முதல் கட்டமாக தலா ரூ.2 இலட்சம் நிதியுதவியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி,;

தேசிய இளைஞர் தினத்தில் தொடங்கப்பட்ட “புத்தொழில் களம்” திட்டத்தின் மூலமாகப் தூத்துக்குடியில் இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கும் முன்னெடுப்பை செய்துள்ளோம். அதன் மூலம், 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.10 லட்சம் நிதி என்று முதல் கட்டமாக 3 பேருக்கு தலா ரூ.2 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க ஆலோசித்துள்ளதாக தெரிவித்த கனிமொழி எம்பி, மேலும் கூறுகையில், பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர், இச் சம்பவம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய பெரிய சோகமான நிகழ்வு. அதனை ஒன்றிய அரசாங்கம் திசை திருப்பி அரசியலுக்காக பயன்படுத்தும் சூழலை உருவாக்கி வருகிறது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும், ஒன்றிய அரசு பாதுகாப்பு நடைமுறையில் உள்ள குறைகளை உடனே சரி செய்ய வேண்டும். அதுவே நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் இதனை ஒன்றிய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என கனிமொழி எம்பி, கூறினார்.