தூத்துக்குடி, செப். 24:தமிழக தொழில்துறை வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் வகையில், ரிலையன்ஸ் குழுமத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவு (Reliance Consumer Products Ltd.) ரூ. 1,156 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த உற்பத்தி நிலையம் அமைக்கவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று அறிவித்தார்.
தூத்துக்குடி சிப்காட் அல்லிகுளம்;
இந்த தொழிற்சாலை சிப்காட் அல்லிகுளம் தொழிற்பேட்டை பகுதியில் சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படுகிறது. இதில் மாவு, மசாலா பொருட்கள், பிஸ்கட், பிராந்திய ஸ்நாக்ஸ், உணவு எண்ணெய்கள் போன்ற பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் தலைமையின் கீழ் தமிழகத்தில் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. ரிலையன்ஸ் முதலீடு அதற்குச் சிறந்த உதாரணமாக திகழ்கிறது,” என்று அமைச்சர் டி ஆர் பி.ராஜா தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இத்திட்டத்தின் மூலம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி திறன் மற்றும் திட்ட நிறைவு காலக்கெடு தொடர்பான முழு விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறையில் விரிவாக்கத்திற்கு முக்கியமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே கப்பல் போக்குவரத்து மற்றும் கனரக தொழில்களுக்கு முக்கிய மையமாக விளங்கும் தூத்துக்குடி, தற்போது நுகர்வோர் பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்தித் துறை வளர்ச்சிக்கும் முக்கிய தளமாக உருவெடுத்து வருவதாக தொழில் வட்டாரங்கள் கூறுகின்றன.

