December 1, 2025
#தூத்துக்குடி

பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், அரசு கடும் நடவடிக்கையை துரிதமாக எடுக்கிறது – அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் (26.09.2025) அன்று நடைபெற்ற

“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”

திட்டம் தொடர்பாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான கருத்தரங்கத்தினை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் துவக்கி வைத்து விழா பேருரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததாவது;

பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருத்தரங்க நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு தரப்பட்ட பெண்களுக்கும். சமூக ஆர்வலர்களுக்கும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கான பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசு செயல்படுத்தி வரும் சட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கருத்தரங்கில் சுகாதாரத்துறை, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை. சட்டத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலமும், சட்டங்களின் மூலம் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது? திட்டங்கள் வாயிலாக பெண்களுக்கு எப்படி நலத்திட்டங்கள் பெறவேண்டும்? என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

இக்கருத்தரங்கம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக எந்த அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இரண்டும் எனது கண்கள் போல் என்று எப்பொழுதும் குறிப்பிடுவார்.

சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு அரசு கல்வியை எந்த அளவிற்கு ஊக்கப்படுத்தி வருகிறது மற்றும் தரமான கல்வியை வழங்கி வருகிறது என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து கூறினார். இதன்மூலம் இத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்ற வியப்பு இருந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்ற மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி படிக்க வைக்கிறது. நமது மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் உயர்கல்வி படிக்க விரும்புகிறார்களோ அதற்கு அரசு உதவி செய்யும்.

சமூக நலத்துறையில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றச் செயல்கள் குறித்து சமூக நலத்துறை மற்றும் காவல்துறை மூலம் சிறப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எனவே, குற்றங்கள் எங்கு நடந்தாலும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறை. நீதிமன்றங்கள். சமூக நலத்துறை இணைந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்பதில் இத்துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

மாணவியர்களுக்கான புதுமைப் பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கான தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் நீங்கள் கல்லூரியில் சேர்ந்ததும் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவ மாணவியர்களும் பயன் பெறலாம். மேலும், இத்திட்டத்திற்கு கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு சரியான ஒத்துழைப்பு வழங்காதவர்கள் குறித்து அமைச்சரிடமோ, கலெக்டரிடமோ அல்லது துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

திருமண நிதியுதவி மற்றும் 1 பவுன் தங்க நாணயம் ;

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்தும், ஆதரவற்ற மற்றும் பெற்றோர்களை இழந்த பெண் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் திருமண உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற சமூக நலத்துறையில் விண்ணப்பிக்கலாம். விதவை தாய்மார்களின் பெண் குழந்தைகள் திருமணம், விதவை மறுமணம், கலப்பு திருமணம் உள்ளிட்டவைகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் 1 பவுன் தங்க நாணயத்தை அரசு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இத்திட்டத்திலும் முறையாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு “அன்பு கரங்கள்” திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2000

 தமிழ்நாடு முதலமைச்சர், தாய் தந்தை இல்லாத குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தை இல்லாத குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 18 வயது வரை அவர்களின் கல்வி செலவிற்காக மாதந்தோறும் ரூ. 2000 வழங்குகின்ற அன்பு கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாது அதன் பின்னர் அந்த குழந்தைகள் நான் முதல்வன். புதுமைப்பெண் உள்ளிட்ட அரசு திட்டங்களின் வாயிலாக உயர்கல்வி பயின்று அவர்களின் வாழ்வாதாரம் பெறுவதற்கும், இத்திட்டத்தின் கீழ் ஒரு நபர் கூட விடுபடக்கூடாது என்ற நோக்கத்தில் சிறப்பாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக நலத்துறையின் வாயிலாக வழங்கப்படுகின்ற மோட்டர் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கி வருகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 இவட்சம் மகளிர்கள் பயன்பெற்று வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாத தகுதியுள்ள விடுபட்ட நபர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்து பயன்பெறலாம்.மேலும். நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் உயர்தர சிகிச்சைகளும். இ.சி.ஜி. ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. தொடர் சிகிச்சைகள் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இச்சிறப்பு முகாமினையும் கிராமப்புற மக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும். மேலும் இவை அனைத்தையும் அனைவருக்கும் அறிவித்து அவர்களையும் பயன்பெறச் செய்ய வேண்டும் என அமைச்சர்  பி.கீதாஜீவன் தெரிவித்தார்.

தொடர்ந்து, அமைச்சர் பி.கீதா ஜீவன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 1 மாணவிக்கும். தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 1 மாணவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்காக பற்று அட்டைகளையும். பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற பொது பிரிவினர் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ. 25000, இரண்டாம் பரிசாக ரூ.15000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.10000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், கைம்பெண்கள் நலவாரியத்தில் பதிவு செய்து வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் தையல் பயின்ற 26 பயனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ்களையும், கைம்பெண் நலவாரியத்தின் மூலம் 01 பயனாளிக்கு சுயதொழில் மானியமும், திருநங்கைகள் சுயதொழில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 திருநங்கைகளுக்கு மானியமும், தையல் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 05 பயனாளிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளையும், அன்னை சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் 2024 -25ன் கீழ் 30 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா.ஐஸ்வர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி மற்றும் சமூக ஆர்வலர்கள். திருநங்கைகள், அரசு துறைச் சார்ந்த அலுலவர்கள் கலந்து கொண்டனர்.