December 1, 2025
#தூத்துக்குடி

முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், சி.எஸ்.ஐ. பெருமன்ற உறுப்பினராக போட்டியின்றி தேர்வு

தூத்துக்குடி,தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து திருமண்டல தேர்தலை நடத்தவும், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி நியமிக்கப்பட்டு கடந்த ஜுன் மாதம் 26ம் தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். திருமண்டல தேர்தல் அதிகாரிகளாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் ரெத்தினராஜ் மற்றும் ஜாண் சந்தோஷம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் மூலமாக பல்வேறு கட்டமாக தேர்தல்கள் முறையாக அந்தந்த பகுதியில் உள்ள திருமண்டலத்திற்குட்பட்ட தேவாலயங்களில் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள குருவானவர்களிடம் சபை உறுப்பினர்கள் போட்டியிடுவதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சண்முகபுரம் பரிதுபேதுரு ஆலய திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு பெருமன்றத் தேர்தல் அலுவலர் தூய பேதுரு ஆலயம் சண்முகபுரம் சேகரம் சார்பாக சேகரதலைவர் இம்மானுவேல் வான்ஸ்டாக்கிடம் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன், ஞானராஜ் டேனியல், பிரபாகரன், அலெக்ஸ் ஞானமுத்து, பெண்கள் பிரிவில் தென்றல் மற்றும் 35 வயதுக்குட்பட்ட பிரிவில் நவீன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்களை எதிர்த்து வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் அனைவரும் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வானார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் சபை உறுப்பினர்கள் உள்பட பலரும் திருமண்டல உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.