November 30, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு உடனே வழங்க – கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் பிச்சை எடுத்து நூதன போராட்டம்!

வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு வழங்கக் கோரி கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் விசித்திர போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு புரட்டாசி ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், பருத்தி, மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டன. உரம், களை எடுப்பு, மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ஏக்கருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்ட விவசாயிகள், புயல் மற்றும் கனமழையால் கடுமையான சேதத்தை சந்தித்தனர்.

பெஞ்ஞல் புயலால் வடமாவட்டங்கள் பாதிக்கப்பட்டதைப் போல, கடந்த டிசம்பர் 12 மற்றும் 16ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முழுமையாக சேதமடைந்தன. சேதம் தொடர்பாக விவசாயிகளிடம் அரசு ஆவணங்களை பெற்றும், ஏழு மாதங்களாக வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை.

மேலும், 2024–2025 ஆம் ஆண்டிற்கான அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்தும், அருகிலுள்ள தென்காசி மாவட்ட விவசாயிகள் காப்பீட்டு தொகையை பெற்ற நிலையில், தூத்துக்குடி விவசாயிகள் இன்னும் காத்திருக்கின்றனர். இதனால், அடுத்த பருவத்திற்கு நிலம் தயார் செய்ய தேவையான நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தரையில் துண்டை விரித்து பிச்சை எடுத்து போராட்டம்: இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, “வெள்ள நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்” எனக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினர் தரையில் துண்டை விரித்து பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு கயத்தார் முன்னாள் சேர்மன் ஜெயச் சந்திரன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் வரதராஜன், மேல நம்பிபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் தனவதி, தமாகா மாவட்ட தலைவர் ராஜகோபால், கடலையூர் மாரிச்சாமி, முன்னாள் தலைவர்கள் சங்கையா, ராகவன், ஆதிமூலம், பெருமாள்சாமி, சங்கையா நவநீதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இருநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.