தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வி.சுப்பையாபுரத்தில், விவசாயப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விளாத்திகுளம் அருகே காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.சுப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசகத்தின் மகன் குருமூர்த்தி (32), பாலமுருகன் என்பவரது மனைவி சென்னக்கா (28), சோலைராஜ் என்பவரது மனைவி கனகா (27), வசந்தா (43) ஆகியோர் நேற்று மதியம் வெங்காயம் விதைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியாகினார். சென்னக்கா, கனகா, வசந்தா ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.உயிரிழந்த குருமூர்த்தி உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.காயமடைந்த சென்னக்கா வலது கால் செயலிழந்த நிலையில், கனகா கேள்வித்திறனை இழந்த நிலையிலும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வசந்தா பெருநாழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து காடல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

