December 1, 2025
#தூத்துக்குடி

புரட்டாசி முதல் சனிக்கிழமை தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் -பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி:புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் செய்து தரிசனம் செய்தால், வாழ்க்கையில் முன்னேற்றம், குடும்பத்தில் வளமை, மனநிறைவு, தெய்வ அருள் கிடைக்கும் என்ற பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர்.

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் விழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோபூஜை, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் வைகுண்டபதி பெருமாளுக்கு சத்தியநாராயணர் அலங்காரம் செய்யப்பட்டது. அந்த அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்து, தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் திருப்பாவாடை, தளிகை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்தன.

பக்தர்கள் அதிக அளவில் வந்ததால், கோவிலில் தடுப்புக் கம்புகள் அமைக்கப்பட்டு, வரிசைப்படி தரிசனம் செய்யும் வசதி செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவரும் பக்தி உணர்வுடன் பெருமாளை வழிபட்டு, தீபாராதனையில் கலந்து கொண்டனர்.விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள், கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, தலைமை அர்ச்சகர் வைகுண்ட பெருமாள், கோவில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக செய்திருந்தனர்.