தமிழக அரசு ஊழியர்கள் லீவ் எடுக்கும் விஷயத்தில் புதிய நடைமுறையை இனி பின்பற்ற வேண்டியிருக்கும்.
லீவ் மட்டும் இன்றி மேலும் சில விண்ணப்ப கோரிக்கைகளையும் இந்த செயலி மூலமே கோர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 9 லட்சத்து 48 ஆயிரத்து 522 பேர் உள்ளனர். அரசு துறைகளில் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப பல்வேறு புதுமைகளை அரசு புகுத்தி வருகிறது. குறிப்பாக அரசின் பல்வேறு பணிகள் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. அதேபோல ஊழியர்களின் சர்வீஸ் ரெக்கார்ட் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருக்கின்றன
களஞ்சியம் செயலி:
அரசு ஊழியர்கள் எடுக்கும் லீவுகள், சம்பள விவரங்கள் மற்றும் ஊழியர்களின் பணி அறிக்கைகள் உள்ளிட்டவற்றையும் டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ‘களஞ்சியம்’ என்ற செயலி(APP) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், அரசு ஊழியர்கள் இனி விடுப்பு எடுக்க இந்த செயலியில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
இது தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:- அரசு ஊழியர்கள் அனைவரும் இனி தங்களது செல்போனில் களஞ்சியம் செயலியை கட்டாயம் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அதில் தங்களின் பயோ, விடுமுறை, சம்பள விவரம், பணி அறிக்கை ஆகியவற்றை ஊழியர்கள் சரி பார்த்து கொள்ள வேண்டும்.
லீவுக்கு விண்ணப்பிக்க இனி வரும் காலங்களில் லீவு எடுப்பவர்கள், களஞ்சியம் செயலியை பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அட்வான்ஸ் பணம் பெறுவது சம்பந்தமாக அதாவது பண்டிகை முன்பணம், குறுகிய கால முன்பணம் போன்ற விண்ணப்பங்களும் களஞ்சியம் செயலியின் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

