December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

புதிய வகை இரண்டு பல்லியினத்தை நாகலாபுரத்தை சேர்ந்த சகோதர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்தவர் முகம்மது ஜக்கரியா .இவர் நாகலாபுரத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். நாகலாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வீட்டிற்குள் வரும் பாம்புகளை பிடித்து காட்டில் விடும் பணியை சேவையாக செய்து வருகிறார்.

வன உயிரினங்களை போட்டோ எடுக்க அடர்ந்த வனப் பகுதிகளுக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் நடக்கும் வனவிலங்கு கணக்கெடுப்பிலும் கலந்து கொள்வார்.

இவருடன் இவரது இரண்டு மகன்கள் அகமது ஜெரித் (26) மற்றும் அகமது பாசில் (21) ஆகியோரும் சிறு வயது முதலே காட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டிருந்ததால் இருவருக்கும் வன உயிர்கள் மீதான அன்பால் பாம்புகள், பல்லிகள் குறித்து அறிந்து கொள்ள தொடங்கினர்.

மூத்த மகன் அகமது ஜெரித் உயிரின உயிரியல் படிப்பில் முதுகலை பட்டம் முடித்து தற்போது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்.இளைய மகன் அகமது பாசில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் விலங்கியலில் முதுகலை முதலாமாண்டுபடிப்பு வருகிறார்.
சகோதர்கள் இருவரும் மேற்கு தொடர்ச்சி மலையில் கடையநல்லூருக்கு மேலே உள்ள மேக்கரை பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப் படாத புதிய வகை பல்லி ஒன்றையும், மதுரை அழகர் கோவில் மலைப்பகுதியில் ஒரு புதிய வகை பல்லியையும் கண்டுபிடித்து உள்ளார்கள்.
உலகில் இதுவரை ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பல்லி இனங்களும், இந்தியாவில் இதுவரை 202 வகையான பல்லி இனங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் இவர்கள் கண்டறிந்துள்ள இரண்டு புதிய வகை பல்லிகளும் அடக்கம். இந்த புதிய பல்லிகளை இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (Zoological survey of india) கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட புதிய உயிரினங்களின் பட்டியலில் இந்த இரண்டு பல்லிகளையும் இணைத்துள்ளது குறிப்பிடதக்கது.