November 28, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

குலசேகரப்பட்டினம் தசரா நேரத்தில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி – பாஜக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி,அக்.4:குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா நிறைவை முன்னிட்டு டாஸ்மாக் கடை திறக்க முயற்சி செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாடு முழுவதும் தசரா திருவிழா கடந்த 10 நாட்களாக சிறப்பாக நடைபெற்றது. தென் மாவட்டங்களில் குறிப்பாக குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்கு விரதமிருந்து, பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடனை செலுத்தும் பக்தர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.

பொதுவாக குலசேகரப்பட்டினம் தசரா 10 நாள் திருவிழா நிகழ்வில் 9ம் நாள், 10ம் நாள் விழாக்கள் நிறைவு பெற்ற பின், பக்தர்கள் 11ம் நாள் அன்று தங்களது நேர்த்திக்கடனை அம்பாளுக்கு செலுத்தி தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் செல்வது வழக்கம். இந்த நேரத்தில் வழக்கம்போல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

ஆனால் இம்முறை, திருவிழா இன்னும் நிறைவு பெறாத நிலையில் இன்று (அக். 4) டாஸ்மாக் கடையை திறக்க முயற்சி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் OBC மாவட்ட தலைவர் வெண்ணிமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் திரண்டு கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவிழா காலம் நிறைவடையும் வரை டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர்கள், பொதுமக்களும் இணைந்து கடையை மூட வைத்தனர். இந்த நிகழ்வில் பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.