December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் சிஎஸ்ஐ போதகரை தாக்கிய அதிமுகவினர்! போதகர் ஜெகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் கீதாஜீவன்

By,CN.அண்ணாதுரை 

தூத்துக்குடி மாவட்டம், மடத்துவிளை சிஎஸ்ஐ ஆலய போதகர் ஜெகன் என்பவரை அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார். தாக்குதலுக்கு உள்ளான போதகர் ஜெகன் அரசு மருத்துவமனையில் அனுமதி.

தூத்துக்குடி மாவட்டம், பண்டார விளையை சேர்ந்தவர் நடேசன் இவரது மகன் ஜெகன், இவர் ஆறுமுகநேரி மடத்துவிளை சிஎஸ்ஐ ஆலயத்தில் போதகராக பணியாற்றி வருகிறார். இவர் 15.10.24 இன்று பணி நிமித்தமாக ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள நாசரேத் தூத்துக்குடி திருமண்டல தலைமை அலுவலகத்திற்கு தனது காரில் வந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் திருச்செந்தூரில் சாமி கும்பிட்டு விட்டு கோவில்பட்டியில் நடைபெற உள்ள அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கார்களில் விரைவாக வந்த அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி எம்.எல்.ஏ,, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ, மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள், அவர்களது ஆதரவாளர்கள் ஆகியோர் தங்களது கார்களுக்கு முன்னே செல்ல வழி கேட்டு ஒலி எழுப்பி உள்ளனர். ஆனால் முன்னாள் சென்று கொண்டிருந்த போதகர் ஜெகன் போக்குவரத்து அதிகமாக இருந்ததால் தனது காரை ஒதுக்க முடியாமல் வந்துள்ளார்.

இந்த நிலையில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை ரவுண்டானா பாலம் அருகே வந்தபோது போதகர் ஜெகன் தனது காரை ஒதுக்கி வழிவிட்ட போது இவருக்கு முன்பாக இரண்டு கார்கள் மற்றும் இவருக்கு பின்னால் மூன்று கார்களில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோருடன் வந்த அதிமுக நிர்வாகிகள் போதகர் ஜெகன் காரை மறித்து நிறுத்தி போகரின் கார் கதவை திறந்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் போதகர் ஜெகன் அச்சத்தில் கூச்சல் போட்டுள்ளார். இருந்தும் இவரது காரின் சாவியை புடுங்கிய அதிமுகவினர் சாவியை தூரே எரிந்துள்ளனர். பின்னர் என்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று போதகர் ஜெகன் கேட்டதற்கு எங்களது காருக்கு வழி விட மாட்டாயா என்று கூறி மீண்டும் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இதனால் காயம் அடைந்த போதகர் ஜெகன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாசரேத் தூத்துக்குடி திருமண்டலத்தை சேர்ந்த சிஎஸ்ஐ போதகர்கள் ஏராளமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

இதற்கிடையே, அதிமுகவினரால் தாக்குதலுக்குள்ளான சிஎஸ்ஐ போதகர் ஜெகனை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் மருத்துவமனைக்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

மேலும்  இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் 9 பேர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தூத்துக்குடியில் சிஎஸ்ஐ போதகர் மீது அதிமுக நிர்வாகிகள் நடத்திய தாக்குதலால் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக போதகர்கள் தெரிவித்தனர்.