December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் சாலையோர வியாபாரிகள், காவல்துறை, மாநகராட்சி அலுவலர்கள் கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை பொருத்தமான உரிய இடங்களில் ஒழுங்குபடுத்தும் நோக்கில் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

வளர்ந்து வரும் தொழில் நகரமான தூத்துக்குடி மாநகரில் வாகனங்களின் பெருக்கமும் அதிகரித்துள்ள நிலையில் இதனை சமாளிக்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலை வசதி மற்றும் போக்குவரத்து ரவுண்டானாக்கள், நடைபாதைகள், வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதுபோல சாலையோர வியாபாரிகள் கண்டறியப்பட்டு இதுவரை 6850 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் தொழில் மேம்பாட்டுக்காக 6300 பேருக்கு தொழில் கடன் இரண்டு கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள் விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகள் தரமான பொருட்களை பொது மக்களுக்கு விற்பனை செய்வது குறித்தும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஒழிப்பதில் மேயர் ஜெகன் பெரியசாமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். சாலையோர வியாபாரிகள் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்டங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற சாலையோர வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி பேசுகையில்;

சாலையோர வியாபாரிகள் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு தங்களுக்கு மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும். வியாபாரிகளின் நலனில் அக்கறை கொண்டு உரிமம் பெறும் வழிமுறைகள் எளிதான வகையில் வழங்கி வருகிறோம். மாநகராட்சியானது சாலையோர வியாபாரிகளுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் அதேபோல் சாலையோர வியாபாரிகளும், மாசற்ற பசுமையான மாநகரை உருவாக்க மாநகராட்சி எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா, நகர காவல் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் மதன், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள்,  விண்மீன் பாலா துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.