December 1, 2025
#மகளிர்

ஒரு வெற்று டைரியில் நிரம்பிய அன்பு…

அன்பின் நிழலில் குறைகள் கூட சிறியதாகி விடுகின்றன

திருமணத்தின் 25 ஆண்டுகள் பூர்த்தியானபோது, கணவன்–மனைவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருசேர அமர்ந்து தேநீர் அருந்தினார்கள். அதே நேரத்தில், தங்கள் உறவின் இடைவெளியை குறைக்க, மனைவி ஒரு யோசனையை முன்வைத்தாள் – இனி இருவருக்கும் இடையே புகார்கள் இருந்தால், தனித்தனியாக டைரிகளில் எழுதிவைத்துக்கொள்வோம். அடுத்த ஆண்டு திருமண நாளில் அதைத் திறந்து படிப்போம் என்றார்.

அந்த யோசனையை ஏற்றுக்கொண்ட கணவன்–மனைவி, தினசரி உணர்ச்சிகளையும் புகார்களையும் தங்கள் டைரிகளில் எழுதத் தொடங்கினார்கள்.

ஒரு வருடம் பறந்துபோனது… 26ஆவது ஆண்டு திருமண நாள். அவர்கள் இருவரும் தங்கள் டைரிகளை மாற்றிக்கொண்டு படிக்க ஆரம்பித்தனர். மனைவியின் டைரியில் பல புகார்கள் இருந்தன – வாக்குறுதி நிறைவேற்றாதது, பெற்றோரின் விருந்தினர்களிடம் அன்பாக நடக்காதது, பிடிக்காத புடவையை வாங்கித்தந்தது, செய்தி சேனல் போட்டது, சோபாவில் ஈரமான துவாலை விட்டது… எனப் பல குறைகள்.

அவற்றைப் படித்த கணவரின் கண்கள் கலங்கின. “இனி இவை அனைத்தையும் திருத்திக்கொள்வேன்” என உறுதியளித்தார்.

மனைவி கணவரின் டைரியைத் திறந்தாள். பல பக்கங்களை புரட்டியும் ஒன்றும் எழுதப்படவில்லை. இறுதியில், கடைசி பக்கத்தில் மட்டும் இருந்த அந்தச் சொற்கள் அவளை கண்கலங்கச் செய்தன:

“உன்னிடம் குறைகள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், உன் அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முன்னால் அந்தக் குறைகள் மிகச் சிறியது. என் வாழ்க்கை முழுவதும் நீ என் நிழல் போலிருந்தாய். நிழலில் குறைகளை எப்படி தேட முடியும்…?”

மனைவி உடனே தனது புகார் டைரியை கிழித்து எரித்தாள்.

திருமண உறவு குறைகளை தேடுவதால் வலிமையடையாது. தியாகங்களையும் அன்பையும் நினைவு கூர்ந்தால் தான் அது வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் பந்தமாக மாறும்.