December 1, 2025
#தூத்துக்குடி

அமித்ஷா வீடுதான் நீதிமன்றம் தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சி வாசுகி கடும் தாக்கு

அதிமுக பாம்பு வாயில் சிக்கிய தவளை” – கம்யூனிஸ்ட் வாசுகி 

தூத்துக்குடி, செப்.19 –மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநகரச் செயலாளர் முத்து தலைமை வகிக்க, ஒன்றியச் செயலாளர்கள் சங்கரன், முனியசாமி முன்னிலை வகித்தனர்

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வாசுகி உரையாற்றுகையில், பிரதமர் மோடி அரசை கடுமையாக தாக்கினார். “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகை வழங்கப்படுகிறது. ஆனால் ஏழை மக்கள்மீது அனைத்து வரிகளும் சுமத்தப்படுகின்றன. நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கும் வரிகளை விதிக்கிறார். 11 ஆண்டுகளாக மோடி ஆட்சியில் அராஜகமே நடந்துகொண்டிருக்கிறது. டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்றபோது, 56 இன்ச் மார்பு கொண்ட மோடி எதற்கும் பதிலளிக்கவில்லை” என அவர் விமர்சித்தார்.

மேலும், தேர்தல் ஆணையத்துடன் கூட்டுச்சேர்ந்து பாஜக எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதாகவும், புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழர்களின் எதிர்காலத்தை திசைதிருப்ப முயற்சிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டினார். “தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை சிங்கம் என நினைக்கிறார். ஆனால் அதிமுக “பாம்பு வாயில் சிக்கிய தவளை போல” நிலையில் உள்ளது. செங்கோட்டையன், பழனிச்சாமி மாறி மாறி டெல்லி பாய்ந்து அமித்ஷாவை சந்திக்கிறார்கள். ‘வழியில் பார்த்தேன், மனஅமைதிக்காக ஹரித்துவாருக்கு சென்றேன்’ என்று சொல்வது சிரிப்பாக உள்ளது. இன்று அமித்ஷா வீடுதான் நீதிமன்றமாக மாறியுள்ளது” என்று  கூறினார்.

விஜய் அரசியல் ;

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். “நான் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சுபிட்சம் ஆகிவிடும் என்கிறார். ஆனால் என்ன கொள்கை? எதற்கும் மாற்றுக் கொள்கை சொல்லவில்லை. நாங்கள் மாற்றுக் கொள்கை கொண்டிருக்கிறோம். அதை மக்கள் முன் வைக்கிறோம். சமூக மாற்றம் வேண்டுமெனில் இளைஞர்கள் முதலில் தங்கள் வாழ்க்கையிலேயே மாற்றத்தை துவங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அதேவேளை, திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், “நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி எதிர்கட்சிகளின் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் வெளிநாடு பயணத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார். 21 நாள் கூட்டத்தில் 34 மணி நேரமே விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டது. இந்திய கலாச்சாரத்தை அழிப்பதே இவர்களின் நோக்கம்” என்றார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் பேசுகையில், ஸ்டெர்லைட் போராட்டத்தை கையாள்வதில் அதிகாரிகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, “கூட குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனைகள் வழங்காமல், பெரிய தொழிலதிபர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மட்டும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஏழை எளிய மக்கள் தெருவில் தள்ளப்படுகிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டினார்.

கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிலை நிர்வாகிகள் பூமயில், ரசல், பேச்சிமுத்து, அப்பாதுரை, ராஜா, சண்முகராஜ், ரவிச்சந்திரன், நம்பிராஜன், முத்துக்குமார், மணி, ரவிதாகூர், கந்தசாமி, வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.