பக்தர்கள் கருத்துகளை பரிசீலிக்க கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவு
திருச்செந்தூர்:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘பிரேக் தரிசனம்’ (நிறுத்த தரிசனம்) அறிவிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது. அதேசமயம், பக்தர்கள் தெரிவிக்கும் ஆட்சேபங்களை கோயில் நிர்வாகம் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம், விழா நாட்களைத் தவிர்த்து பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் ‘நிறுத்த தரிசனம்’ அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இதற்கான கட்டணம் ரூ.500 எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை, பக்தர்களின் மத உரிமையை பறிப்பதோடு, பொதுமக்களுக்கு சிரமம் தரும் நடவடிக்கையாக உள்ளதாக அவர் வாதிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் முன்னிலையில், அரசுத் தரப்பில் வழக்குரைஞர், “கோயில் அறிவிப்பாணைக்கு எதிராக பக்தர்கள் கடந்த 11-ஆம் தேதி வரை ஆட்சேபங்களை பதிவு செய்யலாம் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் அந்த கால எல்லை முடிவதற்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், இந்த மனு ஏற்க முடியாது” என வாதிட்டார்.இதையடுத்து, நீதிமன்றம், “கோயில் நிர்வாகம் பக்தர்களின் கருத்துகளை கவனத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும். மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டது.
பக்தர்களின் மனநிலை;
இந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து, திருச்செந்தூரில் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. சிலர், “500 ரூபாய் கட்டணம் விதிப்பது பொதுமக்களை மன உளைச்சலை ஏற்படுத்து நடவடிக்கை. கடவுளின் தரிசனம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என விமர்சனம் செய்கின்றனர்.மற்றொரு பகுதி, “நெரிசலைக் குறைத்து, ஒழுங்காக தரிசிக்க ஏற்பாடாக இருந்தால், கட்டண முறையிலும் பிரச்சினை இல்லை” எனக் கருதுகின்றனர்.குறிப்பாக தொலைதூரத்திலிருந்து வரும் பக்தர்கள், “ஒரு மணி நேரம் கோயில் மூடப்பட்டால் சிரமம் ஏற்படும்” என்று கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகம் மீது பக்தர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பின், பக்தர்களின் ஆட்சேபங்கள் எவ்வாறு பரிசீலிக்கப்படுகின்றன என்பதைக் பொறுத்திருந்து காண வேண்டும் என மக்கள் கூறினர்.

