December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் -மேயர் ஆய்வு 

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் தேங்காமல் இருக்க கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்று இம்முறையும் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சீராக கடலில் கலக்குமாறு பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. சாலைகளில் மழைநீர் தேங்குவதை  தடுக்கும் வகையில், முக்கியமான பகுதிகளில் உள்ள ஓடைகள் மற்றும் வடிகால்கள் சுத்தம் செய்யப்படுவதுடன், தேவைப்படும் இடங்களில் அவற்றை அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மூன்றாவது மைல் மேம்பாலம் அருகே அமைந்துள்ள இந்திய உணவு கழகத்தின் (எப்சிஜி குடோன்) முன்புறம் வழியாக செல்லும் மழைநீர் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புறநகர் பகுதிகளில் இருந்து பெருமளவில் வரும் மழைநீர் இவ்வோடையின் வழியாக கடலில் கலப்பதால், பருவமழை காலத்தில் மக்கள் பாதிப்படையாமல் இருக்க இப்பணிகள் மிக அவசியமாகின்றன.

இந்தப் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் விரைந்து நிறைவடைய வேண்டும் என்பதையும், எந்தவித குறையும் ஏற்படக்கூடாது என்பதையும் வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

இந்த ஆய்வின்போது, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்  ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் ஆகியோர் உடன் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

மழைக்காலங்களில் பொதுமக்கள் எந்தவித சிரமமும் அனுபவிக்காமல் இருக்க தேவையான அனைத்துப் பணிகளும் மாநகராட்சியின் மூலம் திட்டமிட்ட முறையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகின்றனர்.