| தூத்துக்குடி மாவட்ட மானாவாரி நிலங்களில் சேனைக்கிழங்கு, சீனிக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் கடந்த சில வாரங்களாக காட்டுப் பன்றிகளின் தாக்குதலில் அழிவுக்குள்ளாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து, பயிர்களை எப்படிப் பாதுகாப்பது என்ற கவலையில் உள்ளனர். |
மானாவாரி நிலங்களின் சவால்கள்,
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1,70,000 ஹெக்டேர் மானாவாரி நிலங்கள் உள்ளன. வடகிழக்கு பருவமழையை நம்பியே இப்பகுதியில் சாகுபடி நடக்கிறது. மக்காச்சோளம், உளுந்து, பாசி, கம்பு, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி போன்ற பயிர்கள் இப்பகுதியில் பொதுவாக சாகுபடி செய்யப்படுகின்றன.
ஏற்கனவே 2019-ல் அமெரிக்கன் படைப்புழு எனப்படும் பூச்சி தாக்குதலால் மக்காச்சோளம் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதன் பின் பூச்சிக்கொல்லி தெளிப்பால் மட்டுமே பயிர் காப்பாற்றப்பட்டதால் செலவுகள் இரட்டிப்பு ஆனது.
காட்டுப்பன்றிகள் பெருகிய காரணம்,
கொரோனா காலத்தில் பராமரிப்பு இல்லாமல் வீட்டிலிருந்து வெளியேறிய பன்றிகள், காட்டுப் பன்றிகளுடன் இணைந்து பெருகின. ஆண்டுக்கு மூன்று முறை இனப்பெருக்கம் செய்யும் தன்மையால் இப்போது அவை கூட்டமாகக் காணப்படுகின்றன. ஒரு முறையில் 5 முதல் 10 குட்டிகள் வரை பிறப்பதால் பன்றிகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது.
சேனை, சீனிக்கிழங்கு பறிபோனது.
சமீபத்தில் ரெகுராமபுரம் கிராமத்தில் சேனை, சீனிக்கிழங்கு தோட்டங்களில் பன்றிகள் கூட்டமாக நுழைந்து, செடிகளையும் மண்ணுக்கடியில் இருக்கும் கிழங்குகளையும் முண்டி தின்று முழுமையாக அழித்துவிட்டன. சில பகுதிகளில் மக்காச்சோளம் விதை முளைத்த நிலையிலேயே பன்றிகள் வந்து தின்று விடுகின்றன.
இன்னும் பருவமழை தொடங்கவே இல்லை; விதைகள் போடும் காலம் தான் வருகிறது. அப்போதே இவ்வளவு சேதம் ஏற்பட்டால், மழைக்காலத்தில் எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?” என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
“சட்டம் தூங்குகிறது” என விவசாயிகள் குற்றச்சாட்டு விவசாயிகள் பலமுறை அரசு கவனத்துக்கு கொண்டு வந்தபின், சட்டப்பேரவையில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் நடைமுறை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
“அரசு சட்டம் செய்தது; ஆனால் அது கோப்புகளில் தூங்கிக்கிடக்கிறது. எங்களின் நிலங்களைப் பன்றிகள் சீரழித்து வருகின்றன. எப்படிச் சாகுபடி செய்ய முடியும்?” என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது:
“காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தும் சட்டம் உண்மையில் செயல்படுத்தப்பட வேண்டும். கடந்த டிசம்பர் மாத மழையில் சேதமான பயிர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ரூ.59 கோடி நிவாரணத் தொகை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.


