December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் கோயிலில் ரூ.500 விரைவு தரிசனம் – பக்தர்கள் கடும் எதிர்ப்பு

கடவுளை வைத்து வியாபாரம் செய்கிறார்களா?” – கேள்வி எழுப்பும்  பக்தர்கள்


ரூ.500 கட்டணச் சீட்டில் விரைவு (Break Darshan) முறை;

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ரூ.500 கட்டணச் சீட்டில் விரைவு (Break Darshan) முறை அமல்படுத்தப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திக்குறிப்பை இணை ஆணையர்/செயல் அலுவலர் ஞானசேகரன் மற்றும் தக்கார் இரா.அருள்முருகன் வெளியிட்டுள்ளனர். சட்டமன்ற மானியக் கோரிக்கையின் அடிப்படையில் தினசரி பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை பக்தர்கள் விரைவு தரிசனம் செய்யலாம் என்றும், அதற்கான கட்டணம் ரூ.500 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடவுளை வழிபடுவதற்கே பணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? ஏற்கனவே இலவச தரிசனத்திலும் பல மணிநேரம் காத்திருக்கும் பொதுமக்கள், பணம் செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அநீதி. இது கடவுளை வைத்து நேரடி வியாபாரம் செய்வதற்குச் சமம்” என பக்தர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

.இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணைத் தலைவர் ஆர். ஜெயக்குமார் தெரிவித்ததில், “இந்த ரூ.500 கட்டணம் என்பது பகல் கொள்ளை. பக்தர்கள் அனைவரும் இலவசமாகவே சுவாமி தரிசனம் செய்யும் உரிமை பெற்றவர்கள். அதனை விரைவுபடுத்தும் வசதிகளை கோயில் நிர்வாகம் உடனடியாக செய்ய வேண்டும். அதோடு, ஆன்லைன் வழியாக தரிசனம் முன்பதிவு செய்வதற்கான வசதியையும் ஏற்படுத்த வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

மேலும், அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்கள் மக்களின் நம்பிக்கையையும் மத உணர்வையும் பணமாக்கும் தளமாக மாறிவிட்டன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பொதுமக்கள் வேகமாக சுவாமி தரிசனம் செய்யும் வழிமுறைகளை ஏற்படுத்தாமல், “பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் சலுகை” என்ற வணிக ரீதியான அணுகுமுறை கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கான ஆட்சேபணைகள் / ஆலோசனைகள் 11.09.2025 மாலை 6 மணிக்குள் கோயில் அலுவலகத்தில் பெறப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் வலியுறுத்துவது, இத்திட்டமே வாபஸ் பெறப்பட வேண்டும் என்பதே.