தூத்துக்குடி ரகமதுல்லா புரம் பகுதியில் புதிதாக தார் சாலை அமைப்பதற்கான பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளில் புதிதாக தார்சாலைகள் அமைத்தல் மற்றும் கழிவு நீர் கால்வாய், மழை நீர் வடிகால், பூங்காக்கள், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல் போன்ற பல் வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதையடுத்து ரகமதுல்லா புரம் பகுதியில் புதிதாக தார் சாலை அமைய உள்ள இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு இருந்த பெண்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது மேயர் கூறுகையில்; “வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக சாலை அமைக்கும் பணிகளையும், மழைநீர் வடிகால் பணிகளையும் விரைந்து முடிக்கத் திட்டமிடபட்டுள்ளது. புதிதாக 250க்கும் மேற்பட்ட பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இன்னும் ஒருசில இடங்களில் புதிய குடிநீர் பைப் லைன் இணைப்பு கொடுக்கும் பணியும் நடந்துவருகிறது. மழைக்கு முன்பாக பக்கிள் ஓடை உள்ளிட்ட அனைத்து நீர் வழித்தடங்களும் தூர் வாரி, சீரமைத்து தயார் நிலையில் வைக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
ஆய்வின்போது திமுக வட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

