December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

முத்துலாபுரம் பகுதியில் புதிய பட்டாசு ஆலைக்கு எதிர்ப்பு – கரிசல் பூமி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தில் புதிய பட்டாசு ஆலையை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ. வரதராஜன் தலைமையில் இன்று (02.09.2025) காலை மு.கோட்டூர் விலக்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்கள் நிலங்கள் வாங்கி புதிய ஆலையை தொடங்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இனாம் அருணாசலபுரம் கிராமத்தில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, பல வீடுகள் சேதமடைந்தது. அனுமதி விதிமுறைகளை மீறி ஆபத்தான வகைப்பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை புறக்கணித்து புதிய ஆலையினை அனுமதி வழங்கிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கண்டித்து விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அ. வரதராஜன்,

மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பட்டாசு ஆலையினை உடனடியாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகமும் சட்டமன்ற உறுப்பினரும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் பதில் கோரி முழக்கமிட்டனர்.நிகழ்ச்சியில் மேலநம்பிபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் தனவதி, சமூக ஆர்வலர் அய்யாத்துரை, பா.ஜ.க. ஒன்றிய தலைவர் பாண்டி, தோல்மலைப்பட்டி முன்னாள் தலைவர் பொண்ணுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

.