அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவுக்கு எதிராக 25% வரி மற்றும் கூடுதல் 25% அபராத வரி விதித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 50% வரிசுமை இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவை கடுமையாக விமர்சித்த அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ரிக் சான்சஸ், ANI-க்கு அளித்த பேட்டியில்,
“இது மரியாதையற்றதும், அறியாமையால் செய்யப்படும் பிழையும் ஆகும். இந்தியா உலக அரங்கில் மிகப்பெரிய ஜனநாயக நாடு; அவர்கள் பள்ளிக்குழந்தைகள் அல்ல. அமெரிக்கா இந்தியாவுக்கு கட்டளை இட முடியாது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“உக்ரைன் போரின் அடிப்படை காரணங்களை புரியாமல் இந்தியாவை அழுத்துவது தவறானது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதை மிக நிதானமாக கையாளுகிறார். அதேவேளையில் அமெரிக்கா மரியாதையின்றி நடந்து கொள்கிறது. இந்தியாவின் பங்களிப்பு உலக வரலாற்றில் ஐரோப்பா, மெசப்போத்தாமியாவிற்கு இணையானது அல்லது அதைவிட உயர்ந்தது. காந்தியுடன் தான் இந்திய வரலாறு தொடங்கவில்லை; இந்தியாவுக்கு தனி ஜனநாயக வரலாறு இருக்கிறது. இந்தியா என்ன வாங்க வேண்டும், எங்கிருந்து வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டளை இட முடியாது” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்
இதற்கு பாஜக நிர்வாகி ஆர். ஜெயக்குமார் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு, மாவட்ட துணை தலைவர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்) கூறுகையில்,
“சில பத்திரிகைகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மக்களை திசை திருப்பும் வகையில் உண்மைக்கு புறம்பாக மோடியை குறிவைத்து பொய்யான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால், உலக அரங்கில் மோடி எடுத்துக் கொள்ளும் நிலைப்பாடு இந்தியாவின் மரியாதையையும் சுயாட்சியையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய விமர்சனங்களுக்கு தக்க பாடமாகவே இந்த செய்தி அமைகிறது” என்று தெரிவித்துள்ளார்.

