December 1, 2025
#திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி உதவி பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவி பொறியாளர் பிலிப் ஆண்டனி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரது வீட்டில் 7 மணி நேரம் சோதனை நடத்தினர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திருநெல்வேலியில் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளுக்கான கண்காணிப்பு பொறுப்பில் பிலிப் ஆண்டனி நியமிக்கப்பட்டிருந்தார்.

1,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் நடைபெற்ற காலத்தில், பிலிப் ஆண்டனி வண்ணார்பேட்டை பிரபல நகைக்கடையில் அடிக்கடி நகைகள் வாங்கியதும், சொகுசு கார்கள், சென்னையில் அடுக்குமாடி வீடு வாங்கியதும், அதிகாரிகள் கவனத்தில் கொண்டனர்.  மேலும் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, அவர் நீலகிரி, திண்டுக்கல், கோவில்பட்டி பல்வேறு  ஊர்களுக்கு மாற்றப்பட்டார். புகார்களைத் தொடர்ந்து, ஒரே மாதத்தில் பல நகராட்சிகளுக்கு மாற்றப்பட்டிருந்தாலும், அவர் மீதான சந்தேகங்கள் நீங்கவில்லை.

இதன் விளைவாக, பிலிப் ஆண்டனி மற்றும் அவரது மனைவி நசீமா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 90 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி ஐசக் நகரில் உள்ள அவரது வீட்டில் நடந்த 7 மணி நேர சோதனையில், பல அதிர்ச்சிக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.