தூத்துக்குடி, மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் பிங் பார்க், போதை மீட்பு மறுவாழ்வு மையம், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் முன்னிலை வகித்தார்.
முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்;
தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு வாரமும் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது, தெற்கு மண்டலத்தில் 18வது முகாம் நடைபெறுகிறது.
இதுவரை 3150க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றுள்ளன. தெற்கு மண்டலத்தில் மட்டும் 610 மனுக்கள் பெறப்பட்டு 524 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதில் 86 மனுக்களில் சாலை கால்வாய் கேட்டு விண்ணப்பித்த மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. மாநகராட்சி பகுதியில் 954 சாலைகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறாத சூழலில், 2009 ஆம் ஆண்டு தெற்கு மண்டலத்துடன் முத்தையா புரம், அத்திமரப்பட்டி உட்பட பல பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இப்பகுதிகளில் கடந்த மழைக்காலங்களில் நீர் தேங்கியுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு முழுவதுமாக சீரமைக்கப்பட்டுள்ளது. சாலை வசதி, வடிகால்கள் வசதிகள் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. முத்தையாபுரம் பகுதியில் பிங் பார்க் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப் பகுதியில் போதை மீட்பு மறுவாழ்வு மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
கோரம்பள்ளம் குளத்திலிருந்து உபரிநீர் வெளியேறும் நீரோடை 12 கிலோமீட்டர் நகரின் வழியாக செல்கிறது இந்த ஓடை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தங்கம்மாள்புரம், சண்முகபுரம், வீரபாண்டி நகர் பகுதிகளில் புதிய வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது மழைக் காலத்துக்கு முன்னதாக பணிகள் நிறைவு பெறும். மேலும் திருச்செந்தூர் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுள்ளது. இங்கிருந்த சிறு சிறு கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. துறைமுகம் விரைவுச் சாலையில் மாநகராட்சிக்குறிய இடங்களில் சிறு வியாபாரிகள் கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். வியாபாரிகள் இதனை பயன்படுத்தி கொண்டு மக்களையும் பயன்பெறச் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு முக்கியமான வேண்டுகோள் வைக்கிறேன் மக்கள் பாலித்தீன் கேரி பேக்குகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மக்கள் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகளை பயன்படுத்த மாட்டோம் என்ற ஒரு உறுதி ஏற்க்க வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மாநகராட்சி சம்பந்தப்பட்ட மனுக்களுக்கும், இங்கு வழங்கப்படும் கோாிக்கை மனுக்களுக்கும் விரைந்து தீா்வு காணப்பட்டு வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தமிழ்நாடு அரசின் 13 துறைகளின் கீழ் 43 சேவைகளை மக்கள் பயன் பெற்றுக் கொள்ளலாம். தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் இன்று 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வர இயலாதவர்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் வீடு தேடி சென்று தீர்வாணையை வழங்குகிறார்கள் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினாா்.
முகாமில் மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், நகர்நல அலுவலர் சரோஜா, நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளா் காந்திமதி, மாநகர துணை பொறியாளர் சரவணன், இளநிலை பொறியாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார், விஜயகுமார், பட்சிராஜ், வெற்றி செல்வன், திமுக வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பிரசாந்த், சுரேஷ்குமார், சரவணன், ஆணையரின் உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

