| ” பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். திட்டத்தை செயல்படுத்த தனி கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டு, ஊக்குவிப்பு சலுகைகளும் வழங்கப்படும்” |
சென்னை;தமிழகத்தில் கப்பல் கட்டும் துறையில் முதலீட்டையும், வேலைவாய்ப்பையும் அதிகரிக்க, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்தை ‘சிப்காட்’ நிறுவனம் மூலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய நிலை இந்தியாவின் கப்பல் கட்டும் துறையின் சந்தை மதிப்பு சுமார் ரூ.9,200 கோடி மட்டுமே. ஆனால் உலகளாவிய கப்பல் கட்டும் சந்தையின் மதிப்பு ரூ.13 லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது. உலகளவில் சீனா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் முன்னணியில் உள்ள நிலையில், இந்தியாவின் பங்கு 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
நாட்டின் முக்கிய கப்பல் கட்டும் தளங்கள் Cochin Shipyard (கேரளா) – இந்தியாவின் மிகப்பெரிய தளம்.Hindustan Shipyard (விசாகப்பட்டினம், ஆந்திரா) – 80,000 DWT வரை கப்பல் உற்பத்தி Mazagon Dock (மும்பை) – பாதுகாப்பு & வாணிக கப்பல்கள்Garden Reach Shipbuilders (கொல்கத்தா) – வாணிக மற்றும் பாதுகாப்பு கப்பல்கள் கோவா கப்பல்கட்டும் தளம் (Goa Shipyard) (கோவா) – கடற்படை தேவைகளுக்கான கப்பல்கள் Kattupalli Shipyard (சென்னை) – L&T மற்றும் TIDCO இணைந்து உருவாக்கிய தளம்.
இவை தவிர தனியார் துறையிலும் சில கப்பல் கட்டும் தளங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்தியாவின் ஆண்டு உற்பத்தி சுமார் 0.072 மில்லியன் GT அளவிலேயே உள்ளது. மத்திய அரசின் கடல்சார் இந்தியா விஷன் 2030 (Maritime India Vision 2030) திட்டப்படி இதை 0.33 மில்லியன் GT வரை உயர்த்துவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி – ஏன்? தூத்துக்குடி துறைமுகம் தென்னிந்தியாவின் முக்கிய கடற்படை மற்றும் வர்த்தகத் துறைமுகமாக விளங்குகிறது. உலக சந்தையை நோக்கிய ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் நடைபெறும் இந்த நகரத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஏற்ற சூழல் உள்ளது. ஆழமான கடற்கரை,
சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான இணைப்பு ,தொழிற்சாலை அடித்தள வசதிகள் சிப்காட் நிறுவனத்தின் முதலீட்டு ஆதரவு இவை அனைத்தும் தூத்துக்குடியை “புதிய கப்பல் கட்டும் மையம்” ஆக மாற்றுகின்றன..
வேலைவாய்ப்பு & முதலீடு தமிழக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “கப்பல், படகு வடிவமைப்பு, கப்பல் இயந்திர உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக அரசு விரைவில் கடல் போக்குவரத்து கொள்கையை வெளியிட உள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். திட்டத்தை செயல்படுத்த தனி கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டு, ஊக்குவிப்பு சலுகைகளும் வழங்கப்படும்” என்றனர்.
சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகியவை உலகின் 90% கப்பல்களை உற்பத்தி செய்கின்றன. இந்தியா தற்போது மிகச் சிறிய பங்கை மட்டுமே வகித்தாலும், தூத்துக்குடியில் உருவாகும் இந்தத் திட்டம், மாநிலத்தையே அல்லாது, நாட்டின் கப்பல் கட்டும் துறைக்கும் புதிய அடித்தளமாக அமையும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
தூத்துக்குடியில் உருவாகும் இந்த கப்பல் கட்டும் தளம், தமிழகத்தின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கப்போகிறது. உலகளாவிய கப்பல் சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும் முயற்சியில், தமிழகமே முன்னணியில் நிற்கும் வாய்ப்பு இது எனக் கூறப்படுகிறது.

