December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

அரசின் அலட்சியத்தால் காலக்கெடு கடந்தும் முடங்கிய புதூர் வட்டார சாலை பணி – மக்கள் கடும் பாதிப்பு !

தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரம் கீழ்நாட்டுக்குறிச்சி ஊராட்சியில் சக்கிலிபட்டி – கீழ்நாட்டுக்குறிச்சி – அயன்ராஜாபட்டி வரை அமைக்கப்பட வேண்டிய தார்ச் சாலை பணி அரசின் அலட்சியம் காரணமாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால், அப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரம் கீழ் நாட்டுக்குறிச்சி ஊராட்சியில் சக்கிலிபட்டி, கீழ்நாட்டுக்குறிச்சி என இரு கிராமங்கள் உள்ளன. இங்கு மானாவாரி விவசாயம் மற்றும் நன்செய் பாசனம் நடைபெறுகிறது. விவசாயத்திற்கு அடுத்த படியாக கால் நடை வளர்ப்பு, கரிமூட்டத் தொழில் நடைபெறுகிறது. புதூர் வட்டாரத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கீழ்நாட்டுக்குறிச்சி ஊராட்சியில் அரசின் நிதியை எதிர்பாராமல்சொந்த நிதி மூலம் வளர்ச்சிப்பணிகள் செய்யப்பட்டது. சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளாகியும் இவ்வுராட்சி மற்றும் இதனை ஒட்டியுள்ள அயன்ராஜாபட்டி ஊராட்சிக்கும் பேருந்து வசதி, சாலை வசதி கிடையாது. இதனால் கீழ்நாட்டுக் குறிச்சி மக்கள் வேலைக்காகவும், குழந்தைகள் படிப்பதற்காகவும் தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தாப்பாத்தி கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் ஐந்து கிலோமீட்டர் சக்கிலிபட்டி யை கடந்து சாலை வழியாக ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள தாப்பாத்தி செல்ல வேண்டும். இந்நிலையில் இச்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதனால் குழந்தைகள் வெளியூர்களுக்கு பள்ளிக்கு செல்லவோ அவசரத்திற்கு மருத்துவமனை செல்லவோ, பனி நிமித்தமாக மக்கள் இச்சாலை வழியாகவோ வெளியூர் செல்ல மிகவும்  சிரமப்பட்டனர் பொதுமக்களின் பல முறை கோரிக்கைக்கிணங்க,

அதிகாரிகள் அலட்சியம் :

 4.63 கோடி செலவில் பணி நிறைவு பெறாத கிராம சாலை

பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 6.79 கி.மீ தூரம் புதிய சாலை அமைப்பதற்காக ரூ.4.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2024 அக்டோபர் 20ஆம் தேதி பணி தொடங்கியது. 2025 ஜூலை 17 க்குள் பணி முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரிகள் கண்காணிப்பில் அலட்சியம் காட்டியதால் பணி பாதியிலேயே நின்று போனது.

பணி நடைபெறும் இடங்களில் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் காரணமாக பொதுமக்கள் நடைபயணம் செய்தும், வாகனங்களில் சென்றும் விபத்துக்குள்ளாகியுள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் சறுக்கி காயமடைந்துள்ளனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், நோயாளிகள் மருத்துவமனை அடையவும் மக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.

“அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் சாலை பணி காலக்கெடு கடந்தும் நிறைவு பெறவில்லை. ஒப்பந்ததாரர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கண்டனம் தெரிவித்தார்.

மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், சாலை பணி இன்னும் நிறைவு பெறாதது மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. அரசின் அலட்சியம் மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் என பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.