| தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் – காகிதத்தில் மட்டும் நிறைவேற்றப்பட்ட திட்டமா..? தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் வராமல் ஒப்பந்ததாரர்கள் பணம் பெற்றதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு! |
தூத்துக்குடி, பாரதிய ஜனதா கட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மாவட்ட துணை தலைவர் – (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு) R.ஜெயக்குமார் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து ஆய்வு செய்த போது அங்குள்ள மக்களும் சமூக ஆர்வலர்களும் கூறிய புகார்களும் கோரிக்கைகளையும் கேட்டபோது எனக்கு கடும் அதிர்ச்சியை காண நேரிட்டது என தெரிவித்தார்.அது குறித்து அவர் கூறியதாவது;
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் பெரிய கனவுகளோடு ஆரம்பிக்கப்பட்டது. 2024க்குள் கிராமப்புற வீடுகள் அனைத்திற்கும் பாதுகாப்பான, போதுமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதே பாரதப் பிரதமர் மோடியின் நோக்கம். ஆனால், இன்று அந்த இலக்கு எங்கு நிற்கிறது..? மக்கள் வீடுகளில் குழாய்களில் தண்ணீர் ஓடுகிறதா..? அல்லது ஆவணங்களில் மட்டும் பணி நிறைவேற்றப்பட்டதாகக் காட்டப்படுகிறதா..?
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு;
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், கிராமப்புற வீடுகள் அனைத்துக்கும் 2024க்குள் பாதுகாப்பான குடிநீர் வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஊராட்சிகளுக்கு டெண்டர்கள் விடப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
“தேர்ட் பார்ட்டி” ஆய்வு,
இத்திட்டத்தை கண்காணிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டதோடு, “தேர்ட் பார்ட்டி” ஆய்வு அமைப்பு வழியாகவும் சரிபார்ப்பு நடைமுறையாக இருந்தது. தண்ணீர் வீடுகளுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்று அளித்த பிறகு தான் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறையும் இருந்தது.
ஆனால் இவை அனைத்தும் ஆவணங்களில் மட்டுமே நடந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மக்களின் குரல்;
🔹 “எங்கள் கிராமத்தில் குழாய்கள் போடப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு துளி நீரும் வரவில்லை. இருந்தும் ஒப்பந்ததாரர் பணம் பெற்றுவிட்டார் என்று கேள்விப்பட்டோம்.” – கிராமப்புற விவசாயி
🔹 “குடிநீர் திட்டம் வந்துவிட்டதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் தனியார் டேங்கர்களுக்கு ரூ.700 – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம். இது எப்படி நீதி?” – பெண்கள் சுயஉதவி குழு உறுப்பினர்
🔹 “ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மக்கள் வாழ்வை மாற்ற வேண்டும். ஆனால் தூத்துக்குடியில் அது ஊழல் கதையாக மாறிவிட்டது.” – சமூக ஆர்வலர். இவை அனைத்தும் நாங்கள் ஆய்வு செய்தபோது மக்களின் குரலாக ஒலிக்கும் விமர்சனங்கள்.
மக்களின் கேள்விகள்;
1. நிதி எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது, எவ்வளவு பணம் பயன்படுத்தப்பட்டது..?
2. மக்கள் வீடுகளுக்கு தண்ணீர் வராதபோது, தேர்ட் பார்ட்டி அமைப்பு எப்படித் ‘வேலை முடிந்தது’ என்று சான்றளித்தது..?
3. கண்காணிப்பு குழு உண்மையில் ஆய்வு செய்ததா..?
4. ஒப்பந்ததாரர்களுக்கு தொகை வழங்கியதில் அதிகாரிகளின் பொறுப்பு என்ன..?
ஆனால் ஒவ்வொரு முறையும் அதிகாரிகளும் அவருடன் வரும் வட்டார வளர்ச்சி அலுவலரும் தண்ணீர் வராத பைப் முன்னால் நின்று போட்டோ சூட் மட்டும் எடுக்கத் தவறுவதில்லை.
தற்போதைய நிலை;
திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டதாகக் காட்டப்பட்டாலும், தூத்துக்குடி கிராமங்களில் குடிநீர் இன்னும் கனவாகவே உள்ளது. மக்கள் டேங்கர்களை நாடுகிறார்கள், அதிக பணம் செலவழிக்கிறார்கள். “ஜல் ஜீவன் மிஷன் திட்டம் – மக்களுக்கு குடிநீர் தர வேண்டியது; ஆனால் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் லாபம் தரும் திட்டமாக மாறிவிட்டது” என்பது மக்கள் மனதில் எழும் கோபம்.
இதேபோல் ஒட்டப்பிடாரம் ,விளாத்திகுளம் மற்றும் புதூர் போன்ற ஒன்றியங்களில் கீழ்வரும் ஊராட்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, குறிப்பாக வைப்பார், வேம்பார் போன்ற கடற்கரை சார்ந்த ஊராட்சியில் மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர் இவர்களின் குடிநீர் கனவு கானல் நீராகப்போய்க் கொண்டிருக்கிறது.
மக்களின் அடிப்படை உரிமையான குடிநீரை உறுதி செய்ய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமே, ஊழல் மற்றும் அலட்சியத்தால் தோல்வி அடைந்தால் அது மிகப் பெரிய துரதிர்ஷ்டவசமானது. தூத்துக்குடியில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அரசு மிகத் துரிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மக்களின் கருத்து மீண்டும் அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்து தண்ணீர் வருகின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றனர். காகிதங்களில் அல்ல, மக்கள் வீடுகளில் குழாய்களில் தண்ணீர் ஓடும் வரை இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது எனக் கருத முடியாது என R. ஜெயக்குமார் தெரிவித்தார் மேலும் இது போலவே பல திட்டங்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் கிராமப்புற முன்னேற்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இங்கே சரிவர மக்களுக்கு சென்றடையாமல் இருப்பதாக அவர் கூறினார் அதை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு தனது கள ஆய்வு தொடரும் என்றார்.

