| அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்த இந்த மு.கோட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 66 ஆண்டுகளாக (07.07.1959) கல்வி சேவையை வழங்கி வருகிறது. |
.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மு.கோட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 66 ஆண்டுகளாக (07.07.1959) கல்வி சேவையை வழங்கி வருகிறது. அக்காலத்தில் அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்த இந்த பள்ளி, பல கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கான ஒரே நம்பிக்கையாக இருந்தது.
1959 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் காமராஜர் திறந்து வைத்த இந்தப் பள்ளி, 20 கிலோ மீட்டர் சுற்றளவில் உயர்கல்வி வழங்கிய ஒரே பள்ளியாக இருந்தது. காலங்காலமாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் 5 கி.மீ வரை நடந்து வந்து இங்கு படித்து, பலர் உயர்ந்த அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உயர்ந்துள்ளனர்.
தற்போது இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சுமார் 100 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளியின் அடிப்படை வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளதாக கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கவலை தெரிவித்துள்ளார்.
அடிப்படை தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லை : வகுப்பறை தரைத்தளம் சேதமடைந்தும், ஆய்வக சுவர்கள் இடிந்து விழுந்தும் கிடக்கின்றன. குடிநீர் வசதி கிடையாது; மாணவர்கள் கழிப்பிட வசதி இல்லாததால் திறந்த வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு மைதானம் இல்லாமல், நெசவு தறிக்கூட அறை சீர்குலைந்து, ஓட்டுச்சாவடியாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த கட்டிடத்தை அகற்றிய பின் தகர மேற்கூரை அமைத்து ஆடிட்டோரியமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த குடிநீர், கழிப்பறை, ஆய்வக, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும் இதைப் பள்ளி குறைபாடுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


