| தூத்துக்குடி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும், புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மேற்கு மண்டல அலுவலகத்தில் 13.08.25 அன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் செ.ஜெனிட்டா முன்னிலை வகித்தனர். மண்டலத் தலைவர் அன்னலட்சுமி வரவேற்புரையாற்றினார். |
மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு பேசுகையில்; தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 4 மண்டலங்களிலும் சீராக நடைபெறுகிறது. மக்கள் நல்ல முறையில் பயனடைகின்றனர். முகாமில் பிறப்பு சான்றிதழ், முகவரி மாற்றம் பெயா் மாற்றம், குடிநீர் இணைப்பு, பாதாளசாக்கடை, போன்றவைகள் உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, அரசுத் துறைகளின் 43 வகையான சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெற்று பயன்பெறும் வகையில் மாநகர பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. தற்போது நமக்கு மழைக்காலம் ஆரம்பமாக உள்ளது. மேற்கு மண்டலத்தில் 16,17,18 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மழைக் காலங்களில் இந்த பகுதியில் அதிகமாக மழை தேங்கி இருந்த நிலையில் தற்போது இந்த இடங்களை கண்டறிந்து மழைநீர் தேங்காத வண்ணம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று உள்ளது. பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெற்ற உடன் முழுமையாக சாலைகள் போடப்படும். மாநகரில் 964 சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கிள் ஓடையில் முழுமையாக தூர்வாரும் பணிகள் கடற்கரை பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு 6 கி.மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப் படுகிறது. கூடுதலாக 11 வழித்தடங்கள் வழியாக மழைநீர் வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு மண்டலம் கோக்கூர் குளம் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றிலும் நடைபாதை அமைத்தும், நிலத்தடி நீரை பாதுகாக்க மழைநீர் சேகரிக்கப்படும். மாநகராட்சிக்கு உட்பட்ட 206 பூங்கா இடங்களில் பெரும்பாலான இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பசுமைப் பாதுகாக்க செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறிய அளவிலான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பசுமை மாநகரை உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம் பொதுமக்கள் செய்ய வேண்டியது எல்லாம் பிளாஸ்டிக் கேரி பைகள் உபயோகத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பக்கிள் ஓடையில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட கேரிபேக் எடுக்கப்படுகிறது. இதனை தடுக்க பொதுமக்கள் கேரி பேக்குகளை வாங்க மாட்டோம் பயன்படுத்த மாட்டோம் என்ற கட்டுப்பாட்டை எடுக்க வேண்டும் அதற்காக பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் சரோஜா, உதவி ஆணையர் பாலமுருகன், மாமன்ற உறுப்பினர்கள் கணகராஜ், பொன்னப்பன், ஜான் சீனிவாசன், கந்தசாமி, விஜயலட்சுமி, கண்ணன், சந்திரபோஸ் மற்றும் நகர அமைப்பு திட்ட துணை செயற் பொறியாளர் காந்திமதி, சுகாதார அலுவலர் ராஜபாண்டி திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் வட்ட செயலாளர் சி.என்.ரவீந்திரன், ஆணையரின் உதவியாளர் துரைமணி, மேயர் உதவியாளர்கள் ரமேஷ், ஜோஸ்பர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

