கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், கழுகுமலை, புதூர், ஒட்டப்பிடாரம் சுற்று வட்டார விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கனிமொழி எம்பிக்கு கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் அனுப்பியுள்ள மனுவில், தூத்துக்குடி மாவட்டம் தென்பகுதி நிலங்கள் ஆற்றுப் பாசனமும் வட பகுதி வானம் பார்த்த மானாவாரி நிலங்கள் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்யக்கூடியதாகும். தாங்கள் இரண்டாவது முறையாக தூத்துக்குடி எம்பி ஆக உள்ளீர்கள்.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகள் பற்றியும், வாழ்வியல் பற்றியும் நன்கு அறிந்திருப்பீர்கள். ஆற்றுப்பாசன விவசாயிகள் எந்த வகையிலாவது மகசூல் எடுத்து விடுவார்கள். ஆனால் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர்,ஒட்டப்பிடாரம் கழுகுமலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் வடகிழக்கு பருவமழை பருவத்திற்கு சரியாக பெய்தால் மட்டுமே சிறுதானியங்கள் கம்பு, மக்கா, வெள்ளைச் சோளம், பருத்தி உளுந்து, பாசி, கொத்தமல்லி, மிளகாய், சின்ன வெங்காயம் போன்றவைகள் பயிரிட முடியும்.
| சிறு குழந்தைகள் பார்த்து பார்த்து கண் துஞ்சாது ஆயிரம் கனவுகளோடு வளர்ப்பது போல்.. |
விதைப்பு செய்து விதைகள் முளைத்த நாளில் இருந்து ஒவ்வொரு பருவத்திற்கும் வீட்டில் வளர்க்கும் சிறு குழந்தைகள் பார்த்து பார்த்து கண் துஞ்சாது ஆயிரம் கனவுகளோடு வளர்ப்பது போல் பயிர்களின் வளர்ச்சி கண்டு கடந்தாண்டு இழப்பை இந்தாண்டு ஈடுகட்டி விடலாம், பயிரின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியை கண்டு சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைப் போம். பயிர் கதிர் விட்டு மணி பிடித்து பால் கோர்க்கும் போது வேண்டிய சத்து உரங்களை வேர் பகுதியில் கொடுத்து இரண்டொரு நாளில் அப்பயிரில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்போது மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.
இந்தாண்டு பயிர்கள் நம்மை கை விடாது என்று இப்படி பேணிப்பேனி வளர்த்த பயிர்கள் மணிப் பிடித்து திரட்சியாகும் சில சமயத்தில் பருவமழை அதிகம் பெய்து பாதிப்பு ஏற்படும் போது கனவுகள் மண்ணாகி விடுகிறது. உழுது, விதைத்து, களை பறித்து, உரமிட்டு, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து,வன விலங்குகளை விரட்டி அறுவடை சமயத்தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதை மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்டம் முழுவதும் பார்வையிட்டு உத்தரவிட்ட தின் பேரில் வருவாய் துறை கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் உரிய ஆவணங்களான வங்கி புத்தக நகல், பட்டா, 10.1 அடங்கல், ஆதார் அனைத்தையும் நிவாரணம் வழங்க கேட்டுப் பெற்றனர். சேத மதிப்பீடு 59 கோடி ரூபாய் என அரசுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டது. எட்டு மாதங்களாகி விட்டது. அரசு தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது. இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. அடுத்த விதைப்பு பருவம் இன்னும் இரண்டு மாதங்களில் துவங்க உள்ளது.
பெருமைமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களே, அதள பாதாளத்தில் இருக்கும் வானம் பார்த்த பூமியில் வசிக்கும் விவசாயிகளின் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், கழுகுமலை, புதூர், ஒட்டப்பிடாரம் சுற்று வட்டார விவசாயிகள் படும் அவல நிலையை கொண்டு செல்லுங்கள். நிவாரணம் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

