தூத்துக்குடியில்
“குன்றென நிமிர்ந்துநில்”
என்ற தலைப்பில் சட்டம் பயிலும் மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில், கனிமொழி எம்பி, அமைச்சர் பி.கீதாஜீவன், மேனாள் நீதியரசர் சந்துரு, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி எம்பி பேசுகையில்;
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சட்டம் பயிலும் மாணவ மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா இடங்களிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலை இருக்கும். ஆனால் இன்றையதினம் வழக்கறிஞராக வரக்கூடிய மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே, தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர்களின் கனவு நிறைவேறி கொண்டிருக்கிறது. அவர்கள் பெண்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உண்மையான சமூக நீதியை பெற்றுத் தரக்கூடியது கல்வியாகும் என வலியுறுத்தினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர், “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் படித்து முடித்துவிட்டு உயர்கல்வி பயிலுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்கக்கூடிய திட்டத்தை உருவாக்கியுள்ளார். அதில் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் 99 சதவீதம் மாணவ மாணவியர்கள் பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி சென்று இருக்கக்கூடிய மாவட்டமாக திகழ்கிறது. குறிப்பாக, சமூகத்தை மாற்றக்கூடிய வழக்கறிஞர்கள் என்பவர்கள் சிலர். அந்த வகையில் இங்கு பயிலக்கூடிய மாணவர்கள் சிறப்பாக சட்டத்தை கற்றுக் கொண்டு பணியாற்ற வேண்டும். குறிப்பாக மாணவர்களிடையே எந்தவித பாகுபாடும் இருக்கக்கூடாது. மாணவர்களாகிய நீங்களும் இந்த நாட்டின் சட்டங்களை புரிந்து படிக்க வேண்டும்.
குறிப்பாக சட்டத்தை மட்டுமல்லாது. சமூக நீதியையும், உலகத்தின் நடப்புகளையும் புரிந்து படிக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர். தந்தை பெரியார் போன்ற சிந்தனையாளர்களை புரிந்து படிக்க வேண்டும். வெற்றி என்பது மட்டும் இலக்காக அல்லாமல், ஒவ்வொரு வழக்கும் ஒரு நபருடைய வாழ்க்கையை மாற்றக்கூடியது. மேலும், ஒவ்வொரு வழக்கையும் தொலைநோக்கு சிந்தனையுடன் பார்க்க வேண்டும். நியாயத்தின் பக்கத்தில் நிற்க கற்றுக் கொள்ள வேண்டும். நியாயம் குறித்த தெளிவு வேண்டும். நாம் கற்றுக் கொண்ட ஒவ்வொரு விஷயங்களின் நியாயத்தை நாம் சிந்திக்கின்ற பொழுதுதான் மாற்றங்கள் நிகழும். மேலும் மாணவிகளாகிய நீங்கள் உங்களின் எல்லைகளை இவ்வளவுதான் என்று நீங்களே வரையறுத்துக் கொள்ளக்கூடாது. அந்த காலக்கட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் பெண்கள். இங்குள்ள மாணவர்களாகிய நீங்கள் இந்த நாட்டின் சிந்தனைகளை மாற்றக்கூடியவர்களாக, எல்லா விதமான நியாங்களாக மாற்றக்கூடிய வாய்ப்பு உங்கள் கையில் இருக்கின்றது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது;
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சியின் கீழ் மாணவர்கள் பள்ளி படிப்பை படித்து முடித்துவிட்டு உயர்கல்வி பயிலுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்கக்கூடிய முக்கியமான திட்டமாக செயல்படுகிறது. குறிப்பாக இன்றையதினம் சட்டம் பயிலக்கூடிய மாணவர்களை பராட்டும் விதமான இந்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றுள்ளது. மேனாள் நீதியரசர் சந்துரு, சமூக நீதிக்காகவும், பெண்களுக்காகவும். ஏழை எளியவர்களுக்காகவும் சமுதாயத்திற்கு எடுத்துகாட்டாக அவர்களின் தீர்ப்பு விளங்கியது. 2006 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சி காலத்தில் சத்துணவு பணியிடத்தில் கைம்பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு வரவேற்றக்கப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு கைம்பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழிகாட்டியுள்ளார். நல்ல முறையில் தகுதியான வழக்கறிஞராக உங்களை தகுதிபடுத்திக் கொள்ளுங்கள். மேலும் வழக்குகளை வாதாடி வெற்றிப் பெறக்கூடியவர்களாக உயர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்கள்.
மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கலந்து கொண்டு பேசுகையில்
மகாத்மா காந்தி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் விடுதலை போராட்ட வீரர்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றனர். வழக்கறிஞர்கள் தேசத்திற்காக தியாகம் செய்ய வேண்டும். எனவே, மாணவர்களாகிய நீங்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்பு குறித்து கற்றுக் கொண்டு அரசியலமைப்பு சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு, அதன்படி செயல்பட வேண்டும். மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உங்கள் திறமைகளை கண்டறிந்து புதிதாக கல்வி படிப்புகளை மேற்கொள்வதற்கு ஆலோசகர்கள் உள்ளனர். ஒரு நல்ல வழக்கறிஞர் என்பவர் அச்சமில்லாதவராகவும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். நலிவுற்றவர்களுக்கு கட்டணம் இல்லாமல் உரிமையை பெற்றுத் தரக் கூடியவராக வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும். எந்த படிப்பாக இருந்தாலும் நாம் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். மக்களின் உரிமைக்காக போராட வேண்டும். சட்டத்தை புரிந்துக் கொண்டு சாதாரண மக்களுக்கு பயனுள்ள வகையில் பணியாற்ற வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விதிகள் சமூக மாற்றத்தை நோக்கி நகர வேண்டும். 16வது விதியில் அனைவரும் சமம் என்று குறிப்பிடுகிறது. மதசார்பின்மை என்பது அடிப்படையான கட்டமைப்பு. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மாணவர்கள் திறம்பட கற்றுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சட்டம் பயிலக்கூடிய மாணவ மாணவியர்களுக்கு கனிமொழி கருணாநிதி எம்பி. மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, அமைச்சர் பி.கீதா ஜீவன், கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சட்டம் புத்தகத்தை வழங்கினர்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

