திருச்சி லால்குடி அருகே விரகாலூரில் அருட்தந்தை ஸ்டேன் சாமி சிலை திறப்பு விழா – எம்.பிக்கள் கனிமொழி கருணாநிதி, திருமாவளவன் ஆகியோர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த விரகாலூர் கிராமத்திலிருந்து பிறந்து அருட் பணிக்காக துறவு மேற்கொண்டு தன் வாழ்நாளை மக்கள் பணிக்காகப் படித்து 1975 முதல் 1990 வரை ஆசிரியராக பணியாற்றியும், ஜார்ஜ்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர். பல்வேறு போராட்டங்கள் வாயிலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடந்த 2021 ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, சிறையில் இருக்கும்போதே கொரோனா நோய் தொற்றால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டேன் சாமி மரணமடைந்தார்.
ஜூலை 5ஆம் தேதி அவரது நினைவாக சொந்த ஊரான விரகாலூரில் தமிழக ஆயர் பேரவை மற்றும் விரகாலூர் ஸ்டேன் சாமி கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே விரகாலூரில் ஸ்டேன் சாமி சிலை திறப்பு விழா மற்றும் சனநாயக மாநாடு நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஸ்டேன் சாமி மக்கள் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் சந்தனம் வரவேற்றுப் பேசினார். இந்த மாநாட்டினை பள்ளிக் கல்விக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்டேன் சாமி சிலையை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச் செயலாளர் முஹமது அபூபக்கர், தவத்திரு திருடிக்குடில் சுவாமிகள், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

