November 29, 2025
#தூத்துக்குடி

பாரதியார் இல்லம் சீரமைப்பு, அவதூறு பரப்பும் அதிமுக, பாஜக வுக்கு அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்

தூத்துக்குடி; மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் பழைமை மாறாமல் மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில்; “சுதந்திர போராட்ட தியாகிகளையும் தமிழ் அறிஞர்களையும், போற்றுவதிலும், கௌரவிப்பதிலும், திராவிட முன்னேற்ற கழகம் என்றும் முதன்மை வகிக்கும். அதன்படி மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கபட்டது கடந்த 1973 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போதுதான். அவரது இல்லத்தைப் புணரமைத்ததும் கலைஞர் தான். தற்போது தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மகாகவி பாரதியாரின் அனைத்து நூல்கள் மற்றும் கவிதைத் தொகுப்புகளும், கணிணி மயமாக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அமைந்துள்ள முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் முதல் தளம் மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்தது. அதைத் தொடர்ந்து நானும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்களும் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சீரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி யிடமும் தெரிவித்தோம். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியும் பாரதியார் பிறந்த இல்லத்தை சீரமைக்குமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு நிதித்துறை அமைச்சரும் 2025 – 2026ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தை பழைமை மாறாமல் புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் தொன்மை நிறைந்த மகாகவி பாரதியார் இல்ல சீரமைப்புப் பணி என்பது தொல்லியல் துறையின் அனுமதி பெற்றுத்தான் சீரமைக்கப்பட வேண்டும். 

அதன்படி பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால் எட்டையபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் ஆய்வு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின்படி, ரூ.1.53கோடி மதிப்பீட்டில் மகாகவி பாரதியாரின் இல்லம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட 09.06.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டு பணி செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதனடிப்படையில் நேற்று (02.07.2025) ஓப்பந்தபுள்ளி திறக்கப்பட்டு, சேதமடைந்த மகாகவி பாரதியார் இல்லம் பழைமை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

உண்மைநிலை இவ்வாறு இருக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் அவதூறு பரப்பி வருகின்றனர். எவ்வளவுதான் முயன்றாலும் அவர்களின் பொய் பரப்புரையை தமிழ்நாடு மக்கள் நம்ப மாட்டார்கள். என்று அமைச்சர் கீதாஜீவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.