November 30, 2025
#திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளை இரவிலும் ஆய்வு செய்த கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற (07/07/2025) அன்று வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும், இவ்விழாவிற்கான வேள்விச்சாலை பூஜைகள் (01/07/2025) அன்று முதல் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து வேள்விச்சாலை பூஜை நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகப் பல கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று (03/07/2025) இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், திருச்செந்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தக்கார் ஆர்.அருள்முருகன், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத் தலைவர் ரமேஷ், கோட்டாட்சியர் சுகுமாரன், வட்டாட்சியர் பாலசுந்தரம் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.