தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டிடப் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் இன்று பார்வையிட்டார்.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;
தூத்துக்குடியில் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டிடப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும்
அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை தரைத்தளம் மற்றும் ஏழு மேல் தளங்களை (G+7) கொண்ட கட்டிடமாக மொத்தம் ரூபாய் 136 கோடி மதிப்பீட்டில் அமைந்து வருவதாகவும், அதில் கட்டிட மதிப்பு ரூபாய் 121 கோடி எனவும், அங்கு அமையவிருக்கும் மருத்துவ உபகரணங்களின் மதிப்பீடு ரூபாய் 15 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு, மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல் சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு மற்றும் குடல் நோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகள் இடம்பெறுகின்றன. ஏழாவது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைய உள்ளன. மேலும் சிடி ஸ்கேன் வசதி, எக்ஸ்ரே வசதி, நான்கு லிஃப்ட் ஆகியவை அமைகின்றன. கூடிய விரைவில் இந்த அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்திருக்கிறார். 
இந்த ஆய்வின்போது பொதுப்பணி துறையின் செயற்பொறியாளர் செல்வி, உதவி செயற்பொறியாளர் ராகுல், உதவி பொறியாளர் ஜெனிஷா ஜெபமலர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். சிவகுமார், துணை முதல்வர் டாக்டர். கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார், வைதேகி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

