தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் திறக்க கோரி போராட்டங்கள் நடத்தப்படும் என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கூறியுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பைச் சேர்ந்த வணிகர் சங்க பேரவை நிர்வாகி ஜெயபாலன், துளசி சோசியல் டிரஸ்ட் தனலட்சுமி, மக்கள் வாழ்வாதார இயக்க தலைவர் கணேசன், ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்த தங்கம், திரேஸ்புரம் மீனவர் சங்கத்தை சேர்ந்த சம்சுதீன், பண்டாரம் பட்டி மரிய செல்வகுமார், வழக்கறிஞர் விக்டர் மற்றும் சாமுவேல்,தெற்கு வீரபாண்டிய புரம் வரதராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சார்ந்த ரமேஷ் உள்ளிட்ட பலர் கூட்டாக தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.
பத்திரிகையாளர் சந்திப்பு -துளசி அறக்கட்டளைச் சார்ந்த தனலட்சுமி கூறுகையில்;
ஸ்டெர்லைட் ஆலை திட்டமிட்ட வதந்திகளால் மூடப்பட்டுள்ளது இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடி மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. இங்கே கார் கம்பெனி, ஐடி நிறுவனங்கள் வந்துள்ளது என்று சொல்கின்றனர் ஆனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியூர்களில் சென்று வேலை செய்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களுக்கு அரசோ, பிற நிறுவனங்களே வேலை வழங்கவில்லை. எங்களது படித்த பிள்ளைகளை வேலைக்காக வெளியூர் அனுப்பும் சூழ்நிலையே உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் இயங்கினால் இங்கே உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இங்கு போதுமான வேலை வாய்ப்பு இல்லாததால் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் ஐந்தாயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். தற்போது அங்கு வேலை செய்த ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட பல கிராமங்கள் வெறிச்சோடி கிடைக்கின்றன எனவே அரசு எங்களது கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வேண்டும்.இதே நிலைமை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தால் நாங்கள் அடுத்த கட்டமாக பல கட்ட போராட்டங்கள் மூலமாக எங்களது கருத்துக்களை எடுத்து கூறுவோம் என்று கூறினார்.
பண்டாரம் பட்டி மரிய செல்வகுமார் கூறும்போது;
ஸ்டெர்லைட் ஆலை இயங்கும்போது பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சார்ந்தவர்கள் 1500 பேர் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வந்தோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன் ஸ்டெர்லைட் ஆலை இருக்கும்போதும் மூடிய பிறகும் எங்கள் கிராமத்திற்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். ஸ்டெர்லைட் நிறுவனம் பல சமுதாய வளர்ச்சி பணிகளை இந்த கிராமத்துக்கு செய்துள்ளது. தற்போது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்பு இல்லாததால் மூடை சுமக்கவும் கூலி வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தையும், ஸ்டெர்லைட் அனல்மின் நிலையத்தையும் உடனடியாக திறக்க வேண்டும். திறந்தால் எங்கள் கிராமத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளனர். எனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க வேண்டும் என கூறினார்.
வணிகர் சங்க பேரவை நிர்வாகி பிகே.ஜெயபாலன் கூறுகையில்;
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சுமார் 5,000 பேர் நேரடியாகவும் 25 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை பார்த்து வந்தனர். ஸ்டெர்லைட் நிறுவனத்தால் தூத்துக்குடியில் வாழக்கூடிய மக்களுக்கும் அருகில் உள்ள கிராம மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தூத்துக்குடி வந்தபோது பேசுகையில் தூத்துக்குடி மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் தொழிற்சாலைகள் வரவேண்டும் என்றார். தொழிற்சாலை மூடினால் எப்படி வேலை வாய்ப்பு கிடைக்கும், தொழிற்சாலை மூடுவதால் சீனா நாட்டிற்கு தான் லாபம் நமக்கு லாபம் இல்லை. தொழிற்சாலை வந்தால் அரசுக்கு லாபம், வணிகர்களுக்கு லாபம்.
தொழிற்சாலை சார்ந்த வரக்கூடிய தொழிலாளர்கள் இங்குதான் பொருட்களை வாங்குகிறார்கள். இதன் மூலமாக வணிகம் அதிகரிக்கும். தொழிற்சாலை வேண்டும் தொழிற்சாலைகள் வந்தால் தான் இளைய தலைமுறைக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். தூத்துக்குடியில் தொழில் வளம் பெருக ஸ்டெர்லைட் தொழிற்சாலை வேண்டும் என்றார்.

