| கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பெரியதாழை நாம் தமிழர் கட்சி சார்பில், கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை அகற்றக் கோரி போராட்டம் நடந்தது. மீனவ கிராமமான இங்கு, தமிழ்நாடு முழுவதும் கள் இறக்குவதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பனை மரத்தில் ஏறி கள்ளை இறக்கினார்.
22 அடி உயரம் கொண்ட பனைமரத்தில் சீமான் பனை மரம் ஏறுவதற்கு வசதியாக, கட்டைகள் வைத்து ஏணி போன்று கட்டப்பட்டு இருந்தது. பனைமரம் ஏறி உச்சிக்கு சென்ற சீமான் கள் இறக்கினார். பின்னர் அந்த கள்ளினை தொண்டர்களுக்கு பனை ஓலை பட்டையில் ஊற்றி கொடுத்தார். தொண்டர்களும் உற்சாகத்துடன் கள் பருகினார்கள்.
முன்னதாக,சீமான் வருவதற்கு முன்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் அங்கு வந்து கொண்டிருந்த வேளையில் மேடை அருகே திடீரென எம்ஜிஆர் நடித்து புகழ் பெற்ற விவசாயி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.
கடவுள் என்னும் முதலாளி…கண்டெடுத்த தொழிலாளி…விவசாயி விவசாயி…
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சீமான் கலந்து கொண்ட பகுதி, நாடார் சமூகம்,மீனவ சமூகம் அதிகம் வசிக்கும் இடம் அங்கு இயல்பாவேவே அதிமுகவிற்கு கணிசமான செல்வாக்கு உள்ளது.எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலரும் காலம் காலமாக அதிமுகவிற்குதான் வாக்களித்து வருவதாக சொல்லபடக்கூடிய சூழலில், சீமான் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் பாடல் ஒலிக்க விடப்பட்டது அப்பகுதியில் உள்ள அதிமுகவினரை கவனிக்க வைத்து இருக்கிறது

