November 30, 2025
#தூத்துக்குடி

தடைகளை மீறி சாதனை படைத்து முன்னேறும் தூத்துக்குடி மாநகராட்சி – மேயர் ஜெகன் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார், மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பொியசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில்;

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் புதன்கிழமை தோறும் மண்டல வாரியாக நடைபெறுகிறது. பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுவதால், இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளது. வடக்கு மண்டல குறைதீர்க்கும் முகாம்களில் இதுவரை 547 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து தடைகளையும் தாண்டி வேகமாக முன்னேறி சாதனை படைத்து வருகிறது.

வடக்கு மண்டலத்தில் மழைக்காலத்திற்கும் முன்னதாக அனைத்து சாலைகளும் அமைத்து தரப்படும். கோடைகாலத்தில் பல்வேறு இயக்கங்கள் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களுக்கு உதவி வருகிறார்கள். தூத்துக்குடி மாநகராட்சி சார்பிலும் 12 க்கும் மேற்பட்ட இடங்களில் முறையான அனுமதியுடன் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்கி வருகிறோம். கடந்த வாரம் ஒரு சிலர் பழைய பேருந்து நிலையம் முன்பு அனுமதியின்றி பயணிகளுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக பந்தல் அமைத்துள்ளனர். முறையான அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட பந்தலை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் போது அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி மிரட்டியுள்ளனர். இந்த சலசலப்புக்கெல்லாம் நிர்வாகம் அஞ்சாது.

மக்களுக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள் முறைப்படி அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் சரியான அளவில் பந்தல் அமைக்க எந்த தடையும் இல்லை.

வெற்றிகரமாக செயல்படும் பாதாள சாக்கடை திட்டம், மக்கள் முறைப்படி பயன்படுத்த மேயர் வேண்டுகோள்

மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நல்ல முறையில் இயங்கி வருகிறது. 15, 16, 17, 18 வார்டுகள் மற்றும் முத்தையாபுரத்தில் ஒரு சில வார்டுகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் 100 சதவீதம் நிறைவு பெறும். மாநகரில் 8500 பாதாள சாக்கடை மென் ஹோல் உள்ளது.

இதன் பராமரிப்பு பணிகளில் மனித சக்திகளை ஈடுபடுத்தக் கூடாது இயந்திரங்கள் மட்டுமே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பயன்படுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுத்துள்ளோம்.

பாதாள சாக்கடையில் விடப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு மரம் வளர்ப்பு, தொழிற்சாலைபயன்பாடுகளுக்கு வழங்கி வருகிறோம்.

மாநகராட்சியின் சுகாதார பிரிவு அலுவலர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வீடுகளில் இருந்து வெளியாகும் பாத்திரங்கள் கழுவும் நீர் மற்றும் குளிக்கும், துவைக்கும் நீர் போன்ற கழிவு நீர்களை பாதாள சாக்கடையில் விட வலியுறுத்த வேண்டும். இவைகளை சுத்திகரித்து மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த உதவியாக இருக்கும்.

கோடையிலும் நிலத்தடி நீர் நல்ல நிலையில் உள்ளது அதே போல் குடிநீர் சீராக அனைத்து பகுதிகளிலும் வழங்கி வருகிறோம்.

சுகாதாரமான பசுமை மாநகராட்சிக்கு பொதுமக்களும் உதவ வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளது ஐந்தாம் ஆண்டு தொடங்கியுள்ளது.குறைவில்லாத நிறைவான ஆட்சி தொடரும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

கூட்டத்தில் மாநகர பொறியாளர் தமிழ்ச் செல்வன், உதவி ஆணையர் சுரேஷ்குமார், நகர அமைப்பு திட்ட பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன், நகர்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகா், மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், ஜெயசீலி, நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்ஸ்லின், தெய்வேந்திரன், கற்பகக் கனி, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் ரவீந்திரன், காங்கிரஸ் மண்டல தலைவர் சேகர், உதவியாளர் ஜோஸ்பர் மற்றும் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.