November 30, 2025
#தூத்துக்குடி

அதிமுக ஆட்சியின் முறைகேடுகளை சீர்செய்து, முழு வளர்ச்சியில் மாநகராட்சி – மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மேயர் ஜெகன் பொியசாமி கூட்டத்தில் பேசுகையில்;

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாக தவறுகள், குளறுபடிகளை சீர்படுத்தி 2025-ல் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த மாநகராட்சியை உருவாக்கி உள்ளதை எல்லோரும் அறிவீர்கள். குறிப்பாக நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை முறைப்படுத்தி உள்ளோம். பல பகுதிகளுக்கு 24 மணி நேரமும் குடிதண்ணீர் வழங்கி வருகிறோம். மாசு இல்லாத பசுமை மாநகரை உருவாக்கி வருகிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க 1700 புதிய சாலைகள் புதிதாக போடப்படவுள்ளது. மக்கள் குறை தீர்க்கும் முகாம் நான்கு மண்டலங்களிலும் 10 மாதங்களாக நடைபெறுகிறது. இதில் பெறப்படும் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் ஷாப்பிங் மாலாக தரம் உயர்த்தியும், 3வது தளத்தில் பொதுமக்கள் படிப்பறிவை ஊக்குவிக்கும் வகையில் தனியாா் பங்களிப்புடன் நவீன படிப்பகமும், மாநகராட்சிக்கு சொந்தமான 50 ஏக்கர் இடங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக ஐந்து இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. தேவையான பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட உள்ளன. மாதா கோவில் அருகில் மகளிர் பூங்கா உடற்பயிற்சி மையத்துடன் அமைக்கப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்ஜிஆர் மற்றும் ராஜாஜி பூங்காவில் நடைபாதை உடன் சிறு உடற்பயிற்சி கூடம் அமைய உள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு அண்ணாநகர் பகுதி பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானத்தின் படி தற்போது டூவிபுரம் மேற்கு என்று இருப்பதை மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அண்ணா நகர் என்று அனைத்து ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்த மேயர், கால்வாய் பணிகளை பொறுத்த வரையில் வடக்கு, மேற்கு பகுதி பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம். 60 வார்டுகளிலும் பாரபட்சமுமின்றி பணிகளை துரிதமாக செய்து வருகிறோம். பழைய குடிதண்ணீர் குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் பதிக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சண்முகபுரம் டூவிபுரம் பகுதிகளுக்கு முறையான குடிநீர் வழங்குவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றம் முன்னாள் உள்ள சுகாதார மையம், அண்ணா பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலைய கழிப்பறைகள் நிபந்தனையின் பேரில் தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பொியசாமி தொிவித்தாா்.

 தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்

இக் கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீட்டிப்பு உள்ளிட்ட 30 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ் , சுரேஷ் குமார், ராமகிருஷ்ணன், சந்திரபோஸ், சரவணகுமார், வைதேகி, ரெக்ஸிலின், இசக்கி ராஜா, மந்திர மூர்த்தி ஆகியோர் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோரிடம் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் பால குருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச் செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார் ராமகிருஷ்ணன், அதிர்ஷ்டமணி ஜான்சிராணி, நாகேஷ்வரி ஜெயசீலி, ரிக்டா, பேபி ஏஞ்சலின் மற்றும் அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இ.யு.மு.லீக், மதிமுக கவுன்சிலர்கள், துணை ஆணையர் சரவணகுமார், பொறியாளர் தமிழ்செல்வன் உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், நகர் நல அலுவலர் சரோஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.