by, CN. அண்ணாதுரை
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் செ.ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டின் உத்தேச வரவு செலவு அறிக்கை மற்றும் 2024-2025 ஆண்டின் திருத்திய வரவு செலவு அறிக்கையை மேயர் தாக்கல் செய்தார்.
இதில், நடப்பு ஆண்டிற்காக 2025-2026 வருவாய் நிதியில் ரூ.294.59 இலட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் எனவும், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ. 233.23 இலட்சம் உபரியாக வருமானம் வரும் எனவும், கல்வி நிதியில் ரூ 217.47 இலட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் எனவும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மேயர் பேசுகையில்;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடந்த ஆண்டுகளில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 2025-2026 நிதிஆண்டில் பெண்களின் கோரிக்கைகளை ஏற்று புதிய மகளிர் பூங்காக்கள், இளைஞர்கள் நலன் கருதி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நகர் பகுதியில் 5 இடங்களில் சிறிய விளையாட்டு மைதானங்கள், சிறுவர் சிறுமியர்கள் நீச்சல் போட்டிகளில் தேசிய அளவில் சாதனை படைக்கும் வகையில் நீச்சல் குளம் – தரமான நீச்சல் பயிற்சி மையம், ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மைய டிஜிட்டல் நூலகம், நமது பாரம்பரிய உணவுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் உணவுத் தெரு அமைக்கப்படும், மின் சிக்கனத்திற்காக மாநகர் பகுதியில் சூரியஒளித் தகடுகள் அமைத்தல், நகரில் உள்ள 4 குளங்களை மறு சீரமைப்பு செய்து, கோடைகாலத்தில் பயன்படும் வகையில் மழை நீரை சேமிப்பு ஏற்ப்படுத்தப்படும், மேலும் கடற்கரை சாலை மேம்பாடு, துறைமுக பங்களிப்புடன் அனைத்து வசதிகளுடன் கூடிய கடற்கரை பூங்கா அமைக்கப்படும், மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் விநியோகம், தொழில் முனைவோருக்கு பயிற்சி வகுப்புகள் உட்பட 41 திட்டங்களை மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்தார்.

கூட்டத்தில் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து எப்சிஐ குடோன் வரையில் உள்ள பக்கிள் ஓடையையை மண் கால்வாயை கான்கிரீட் கால்வாய் அமைப்பது, பக்கிள் ஓடை முடிவடடையும் பகுதியில் புதிதாக தடுப்புச் சுவர் அமைப்பது, அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடப் பணிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பாதாள சாக்கடை திட்டம் வைப்புத் தொகை திருத்தம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, துணை ஆணையர் சரவணகுமார், மாநகர துணை பொறியாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையாளர்கள் உதவி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.