December 1, 2025
#தூத்துக்குடி

மக்கள் குறைதீர்க்கும் முகாம் மனுக்களுக்கு தீர்வு, மேயர் ஜெகன் ஆணைகளை வழங்கினார்

CN. அண்ணாதுரை 


தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடம் பெறப்படுகின்ற மனுக்களுக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது. இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை தொடர்ந்து தெரிவித்து பயனடைந்து வருகின்றனர்.

19.02.25 அன்று தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 33 மனுக்களின் மீது தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து 21.02.25 இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பேசுகையில்; 

மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, இரண்டு நாட்களுக்குள் பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட மனுக்களும், குடிநீர் இணைப்பு கேட்டும், வணிக பயன்பாடு உள்ளிட்டவைகள் குறித்தும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர். அந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.

இந்த முகாமில் இதுவரை இதுவரை 1667 மனுக்களுக்கு மேல் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் அதாவது 100 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், ரெக்ஸ்ஸின், மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பயனாளிகள் உடனிருந்தனர்.