December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூபாய் 1லட்சத்து 22ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் அதிகாரிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் போன்றவை வழங்கப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பெயரில் டிஎஸ்பி பீட்டர் ஜான்பால் தலைமையில் இன்ஸ்பெக்டர் அனிதா உள்பட 5பேர் இன்று மாலை 4மணி அளவில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மேலாளர் அறை உட்பட அனைத்து இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது உதவி மேற்பார்வையாளர் முத்துராமன் என்பவர் கணக்கில் வராமல் கையில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 22ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணக்கில் வராமல் கையில் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 22ஆயிரம் பணம் பறிமுதல்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருவது மாவட்டம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.